இஸ்ரேல்-ஹமாஸ் போர்: ஹிஜ்புல்லா பயங்கரவாத உட்கட்டமைப்பை தகர்த்த இஸ்ரேல் ராணுவம்
பீரங்கிகளை பயன்படுத்தி ஹிஜ்புல்லா பயங்கரவாத உட்கட்டமைப்பு தகர்க்கப்பட்டது என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.
டெல் அவிவ்,
காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், சர்வதேச மனிதநேய சட்டம் கடுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி இன்று கூறியுள்ளார்.
பாலஸ்தீன விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் சாதக தீர்வு ஏற்படும் வகையிலான நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.
பிரதமர் நெதன்யாகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்போது, இஸ்ரேல் நாட்டு குடிமக்கள் மீது பலாத்காரம், தீ வைத்து எரிப்பு, கடத்தல் மற்றும் சிறுவர், சிறுமிகளை இலக்காக கொள்வது உள்ளிட்ட தாக்குதல்களில் ஹமாஸ் அமைப்பு ஈடுபடுகின்றனர். இந்த தாக்குதல்களால் 1,400 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என கூறியுள்ளார்.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான இஸ்ரேலின் தரை வழி தாக்குதல் தோல்வி அடைய கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். மக்கள் அடர்த்தி நிறைந்த அந்த பகுதியில், சுரங்கங்கள் அதிக அளவில் ஒரு நெட்வொர்க் போல் செயல்படுகின்றன. தரை பகுதி வழியேயான இஸ்ரேலின் தாக்குதல் சவாலான ஒன்றாக இருக்கும்.
ஏனெனில், ஹமாஸ் அமைப்பு தரைக்கு அடியில் விரிவான சுரங்கங்களை அமைத்து உள்ளது. இதனால், இஸ்ரேல் தோல்வியடைய கூடும் என நிபுணர்கள் பலர் எச்சரித்து உள்ளனர்.
தெற்கு இஸ்ரேலின் எல்லையருகே காசாவை முற்றுகையிடும் வகையில், நூற்றுக்கணக்கான பீரங்கிகள் மற்றும் ராணுவ வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளது.
இஸ்ரேல் படைகளை நோக்கி, பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் லெபனானில் இருந்து ஏவப்பட்டன. இதனை தொடர்ந்து, லெபனானின் எந்த பகுதியில் இருந்து இஸ்ரேலுக்குள் ராக்கெட் ஏவப்பட்டதோ, அந்த பகுதியை இலக்காக கொண்டு இஸ்ரேல் படைகள் பதிலடி கொடுத்தன.
ரிஷி சுனக் இஸ்ரேலில் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த முக்கிய தருணத்தில் இஸ்ரேலில் நான் இருப்பதற்காக மனநிறைவடைகிறேன். எல்லாவற்றையும் விட, இஸ்ரேல் மக்களுக்கான என்னுடைய ஆதரவை வெளிப்படுத்துகிறேன். நீங்கள் பேச முடியாத, பயங்கரவாதத்தின் பயங்கர செயலால் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள்.
இங்கிலாந்தும், நானும் உங்களுக்கு துணை நிற்கிறோம் என்று உங்களுக்கு நான் தெரியப்படுத்த விரும்புகிறேன். இஸ்ரேல் பிரதமர் மற்றும் அதிபருடன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த காத்திருக்கிறேன். அவை ஆக்கப்பூர்வ சந்திப்புகளாக இருக்க கூடும் என நான் அதிகம் நம்புகிறேன்.
துயரத்தில் உள்ள நாட்டில் நான் இருக்கிறேன். உங்களுடன் நானும் துயரில் இருக்கிறேன். பயங்கரவாதம் என்ற தீங்கிற்கு எதிராக உங்களுடன் நான் துணையாக நிற்கிறேன். இப்போதும் மற்றும் எப்போதும் என்று அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் தலைவர்கள் அந்த நாட்டிற்கு நேரில் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இஸ்ரேல் சென்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் சென்றுள்ளார். டெல் அவிவ் நகருக்கு சென்ற ரிஷி சுனக்கை இஸ்ரேல் அதிகாரிகள் வரவேற்றனர்.
மோதல் பெரிதாகக் கூடும் என்று மத்திய கிழக்கு நாடுகளின் ஐக்கிய நாடுகள் அவைக்கான தூதர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளின் தூதர் டார் வென்ஸ்லேண்ட் கூறுகையில், மோதல் இன்னும் விரிவடைய வாய்ப்பு இருக்கிறது. மிகவும் ஆபத்தானதாக இது அமையலாம் என்று கூறியுள்ளார்.
லெபனான் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று தங்கள் நாட்டு குடிமக்களுக்கு ஆஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அரசு இது தொடர்பாக விடுத்துள்ள பயண அறிவுறுத்தலில் கூறியிருப்பதாவது:- லெபனானில் தற்போது கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. இந்த நிலை இன்னும் மோசம் அடையலாம். எனவே, லெபனான் நாட்டில் உள்ள ஆஸ்திரேலிய மக்கள், வெளியேற விரும்பினால் உடனடியாக கிடைக்கக் கூடிய விமானத்தில் புறப்பட்டு விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் பலியானோர் எண்ணிக்கை 3,450- ஐ கடந்தது என்று அங்குள்ள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் இஸ்ரேலுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இன்று பிற்பகலில் இஸ்ரேலுக்கு ரிஷி சுனக் பயணம் மேற்கொள்கிறார். இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரது பயணம் இருக்கும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வைக்க உள்ளதாகவும் தெரிகிறது.