அல் ஜசீரா பெண் செய்தியாளர் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது - விசாரணையில் தகவல்

அல் ஜசீரா பெண் செய்தியாளர் மீது துப்பாக்கிச் சூடு வேண்டுமென்றே நடத்தப்பட்டது அல்ல என்று இஸ்ரேல் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.;

Update:2022-09-06 09:05 IST

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. 

இதற்கிடையில், கடந்த மே மாதம் 11-ம் தேதி மேற்குகரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் உள்ள முகாமில் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு இஸ்ரேலிய படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான செய்தியை சேகரிக்க அப்பகுதிக்கு அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் பெண் செய்தியாளர் ஷிரீன் அபு அக்லேஹ் சென்றிருந்தார். அப்போது, நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஷிரீன் அபு அக்லேஹ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஷிரீன் அபு அக்லேஹ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்தது.

இந்நிலையில், அல் ஜசீரா செய்தியாளர் ஷிரீன் அபு அக்லேஹ் தங்கள் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவ வீரர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தாலும், அது வேண்டுமென்றே நடத்தப்பட்டது அல்ல என்று இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.

பாலஸ்தீனிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்பட்டவர்களை நோக்கி சுடப்பட்ட இஸ்ரேல் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கியால் அல் ஜசீரா நிருபர் அக்லே தற்செயலாக தாக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது, அவர் தற்செயலாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.

மூத்த ராணுவ அதிகாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ராணுவ வீரர்கள் அவரை நோக்கி சுட்டபோது, அவர் ஒரு பத்திரிகையாளர் என்று தெரியவில்லை, தவறுதலாக நடந்துவிட்டது. அவர் வேண்டுமென்றே செய்யவில்லை. அதற்காக அவர் வருந்துகிறார், நானும் வருந்துகிறேன் என்றார்.

ஆனால் நியூயார்க்கை தளமாகக் கொண்ட பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு இஸ்ரேல் இராணுவத்தின் அறிக்கையை விமர்சித்தது.

இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையின் போது தலையில் சுட்டு கொல்லப்பட்ட போது, அல் ஜசீரா நிருபர் அபு அக்லே ஹெல்மெட் அணிந்திருந்தார். மேலும், அபு அக்லே "பிரஸ்" என்று குறிக்கப்பட்ட குண்டு துளைக்காத உடையையும் அணிந்திருந்தார்.

இஸ்ரேல் நிருபரை வேண்டுமென்றே கொன்றதாக பாலஸ்தீன நிர்வாகம் குற்றம் சாட்டியது.இந்த கொலைக்கு இஸ்ரேல் பொறுப்பேற்க மறுத்துவிட்டதாக அபு அக்லே குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அல்-ஜசீரா நிறுவனம், இஸ்ரேலிய விசாரணை அறிகைகளை கண்டித்து, ஒரு "சுதந்திரமான சர்வதேச அமைப்பின்" விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. அபு அக்லேவின் கொலையில் அவரது குடும்பமும், நம்பகமான அமெரிக்க விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அபு அக்லே சுடப்பட்டபோது, அவர் அருகில் ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்கள் செயல்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு நடத்திய சுயேட்சை ஆய்வில் தெரியவந்தது.அவரது கொலை வேண்டுமென்றே செய்யப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்