சூரியனை விட 8 மடங்கு பெரிய நட்சத்திரம் வெடித்து சிதறல்; ஆய்வில் தகவல்
11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெடித்து சிதறிய சூரியனை விட 8 மடங்கு பெரிய நட்சத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.;
நியூயார்க்,
வானியல் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஈ.எஸ்.ஓ. என்ற ஐரோப்பிய ஆய்வகத்தின் வானியலாளர்கள், மிக பெரிய நட்சத்திரம் ஒன்று சக்தி வாய்ந்த வெடிப்பில் சிதறிய பின்னர் மீதமுள்ளவற்றை கண்டறிந்து உள்ளனர்.
ஏறக்குறைய 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த பெரிய நட்சத்திரம் வெடித்து சிதறியுள்ளது. அப்படி வெடிக்கும்போது, அந்த நட்சத்திரம் தனது இறுதி வாழ்நாளில் சூரியனை விட 8 மடங்கு அதிக எடையுடன் இருந்திருக்க கூடும் என விஞ்ஞானிகளால் நம்பப்படுகிறது.
பெரிய நட்சத்திரம் வெடித்த பின்னர் மீதமுள்ளவை, நமது சூரிய மண்டலத்தின் அளவை விட 600 மடங்கு பெரிய அளவில் பரந்து காணப்படுகிறது. பூமியில் இருந்து 800 ஒளி ஆண்டுகள் தொலைவில் பால்வழி மண்டலத்தில் அது அமைந்துள்ளது.
இதில், நட்சத்திரத்தின் வெளிப்புற அடுக்குகள் வெடித்ததும், சுற்றியுள்ள வாயுக்களை நோக்கி வெளியே தள்ளப்பட்டு உள்ளன. அவை வாயுக்களாக, இழைகள் போன்ற உருவ அமைப்புடன் உள்ளது. நட்சத்திரத்தின் உட்புற பகுதியை நாம் காண முடிகிறது. அது விண்வெளியில் விரிந்து கிடக்கிறது.
அவற்றில் காணப்படும் ஹைட்ரஜன் அணுக்கள் அதன் ஒளிரும் தன்மைக்கு அடிப்படையாக உள்ளன. இதுபற்றி வானியல் நிபுணர் லெய்பண்ட்கட் கூறும்போது, பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னர், ஒன்று சேர்ந்து உருவான நட்சத்திரத்தின் உட்பகுதி என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
அது குளிர தொடங்கியுள்ளது. இன்னும் பல லட்சக்கணக்கான ஆண்டுகளை எடுத்து கொண்டு இறுதியில் பல புதிய நட்சத்திரங்களாக அவை உருவாகும் என்று அவர் கூறியுள்ளார்.