கொழும்பு துறைமுகத்தில் ஒரே நேரத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தானின் கடற்படை கப்பல்கள்...!
இலங்கையில் ஒரே நேரத்தில் இந்திய நீர்முழ்கிக் கப்பலும் பாகிஸ்தானின் கடற்படை கப்பலும் உள்ளன.;
கொழும்பு,
இந்திய கடற்படையில் 'வாகீர்' என்ற நீர்முழ்கிக் கப்பல் உள்ளது. இது இந்திய கடற்படையின் புதிய உள்நாட்டு கால்வாரி பிரிவை சேர்ந்தது. சமீபத்தில் இந்த நீர்முழ்கிக் கப்பல் 5 நாள் பயணமாக இலங்கை கிளம்பியது. இன்று காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.
"உலகளாவிய பெருங்கடல் வளையம்" என்ற தலைப்பில் சர்வதேச யோகா தினத்தை நினைவூட்ட இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு நீர்மூழ்கிக் கப்பலின் கேப்டன் எஸ்.திவாகர், இலங்கை கடற்படையின் மேற்கு தளபதி சுரேஷ் டி சில்வாவை சந்திக்கிறார். மேலும், நீர்மூழ்கிக் கப்பலினை பார்வையிட பார்வையாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் ஜுன் 21 அன்று, இந்தியா மற்றும் சுவாமி விவேகானந்தர் கலாசார மையத்தின் ஒருங்கிணைப்பில் நிகழ்ச்சியொன்று நடைபெறவிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் இந்திய மற்றும் இலங்கை கடற்படையின் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் கடற்படை கப்பலான 'திப்பு சுல்தான்' நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்தது. இது 134.1 மீட்டர் நீளமுள்ள போர்க்கப்பலாகும். 168 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது. 2 நாட்கள் பயணமாக வந்துள்ளது.
2014 ஆண்டிற்கு பிறகு கொழும்பு துறைமுகத்திற்கு வந்த முதல் நீர்மூழ்கிக் கப்பல் 'வாகீர்' தான். முன்னதாக சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் வந்தது குறிப்பிடத்தக்கது.