இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக 6,747 பேரின் பெயர்களை வெளியிட்ட ஹமாஸ் அமைப்பு
வடக்கு, தெற்கு மற்றும் மத்திய காசா பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்து வருகின்றன. இதில் கட்டிடங்கள் தரைமட்டமாகி மக்கள் குடும்பம், குடும்பாக இடிபாடுகளில் புதையுண்டு வருகின்றனர்.
இதனால் காசாவில் நிமிடத்துக்கு நிமிடம் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை காசாவில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோயுள்ளன. போரில் பலியானவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் மற்றும் பெண்கள் ஆவர். மேலும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலில் 1,400-க்கும் அதிகமானோர் பலியானதும், பெண்கள், சிறுவர்கள் உள்பட 220-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் அமைப்பினர் சிறைபிடித்து காசா பகுதிக்கு கொண்டு சென்றதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை பிணை கைதிகள் 50 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இது குறித்து இஸ்ரேல் ராணுவம் உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்நிலையில் காசாவில் உள்ள ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம், இஸ்ரேலில் 1,400க்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்த ஹமாஸ் தலைமையிலான தாக்குதலுக்குப் பதிலடியாக, பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் இடைவிடாத குண்டுவீச்சில் கொல்லப்பட்ட 6,747 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
2,665 குழந்தைகள் உட்பட கொல்லப்பட்ட ஒவ்வொரு நபரின் பெயர், வயது, பாலினம் மற்றும் அடையாள எண் ஆகியவை இந்த பட்டியலில் அடங்கும். மேலும் சிலரது உடல்களை அடையாளம் காண முடியாததால் கொல்லப்பட்ட 281 பேரின் பெயர் குறிப்பிடப்படவில்லை, மொத்த பலி எண்ணிக்கை 7,028 ஆக உள்ளது என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் மத்திய காசாவில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் - ஹமாஸ் அமைப்பு தகவல்
வடக்கு மற்றும் மத்திய காசாவில் 'இஸ்ரேலின் தரை ஊடுருவலை எதிர்கொண்டுவருவதாக' ஹமாஸின் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக ஒரே இரவில் படையெடுப்பதற்கு குழு தயாராக இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இஸ்ரேலிய இராணுவத்தால் ஏவப்பட்ட ஏவுகணைகளின் தீப்பொறிகள் காசாவின் மேல் வானத்தை ஒளிரச் செய்து வரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் : ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
காசாவில் இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. ஜோர்டானால் முன்வைக்கப்பட்ட இந்தத் தீர்மானம், பிராந்தியத்தில் "உடனடியான மற்றும் நீடித்த மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு" அழைப்பு விடுத்தது.
காசாவில் முற்றுகையிடப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உயிர்காக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளை தொடர்ச்சியாக, போதுமான மற்றும் தடையின்றி வழங்குவதற்கான அவசரத் தேவையை இது வலியுறுத்தி உள்ளது.
22 நாட்களாக தொடரும் போர்: காசாவில் இஸ்ரேலியப் படைகளுடன் சண்டையிடுவதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு தகவல்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்று 22-வது நாளை எட்டியுள்ளது. போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா.வும், உலக நாடுகள் பலவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஹமாசை ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் வரை போரை நிறுத்தபோவதில்லை என இஸ்ரேல் திட்டவட்டமாக கூறிவருகிறது.
21 நாட்களாக காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை தொடங்க மிக தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக அவ்வப்போது காசாவுக்குள் பீரங்கிகளையும், ராணுவ வீரர்களை அனுப்பி ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த புதன்கிழமை இரவோடு இரவாக காசாவுக்குள் ஊடுருவிய இஸ்ரேல் பீரங்கிகள் வடக்கு காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் நிலைகளை தாக்கிவிட்டு மீண்டும் இஸ்ரேல் எல்லைக்கு திரும்பின.
இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் நேற்று மீண்டும் காசாவுக்குள் தரைவழியாக சென்று தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்கள் மற்றும் டிரோன்களிள் ஆதரவுடன் காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் பீரங்கிகள் காசாவின் புறநகர் பகுதிகளில் உள்ள ஹமாஸ் அமைப்பின் நிலைகளை தாக்கின.
இந்த தாக்குதலில் காசா தரப்பில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து தகவல்கள் இல்லை. அதே சமயம் தாக்குதலை நடத்திவிட்டு படைகள் எந்தவித சேதமும் இன்றி எல்லைக்கு திரும்பியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
தரைவழி தாக்குதலுக்கு வேகமாக தயாராகி வரும் அதேவேளையில் காசா மீதான வான்வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் காசாவில் இஸ்ரேலியப் படைகளுடன் சண்டையிட்டு வருவதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது.
மருத்துவமனையின் கீழ் ஹமாஸின் முக்கிய செயல்பாட்டுத் தளம்: இஸ்ரேல் பாதுகாப்பு படை
ஹமாஸ் பயங்கரவாதக் குழுவின் முக்கிய தளம் காசா நகரில் செயல்பட்டு வரும் ஷிபா மருத்துவமனையின் கீழ் உள்ளது என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்ம் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான ஷிபாவின் கீழ் பல நிலத்தடி வளாகங்களைக் ஹமாஸ் கொண்டுள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் ஷிபா மருத்துவமனையின் கீழ் இருந்து செயல்படுகின்றனர். காசாவில் உள்ள பிற மருத்துவமனைகள் பயங்கரவாத சுரங்கப்பாதைகளின் வலையமைப்புடன் உள்ளது” என்று அவர் கூறினார்,