இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிப்பு...!

கடந்த 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.

Update: 2023-10-27 20:28 GMT
ஜெருசலேம்,
Live Updates
2023-10-28 14:00 GMT

இஸ்ரேல் தாக்குதலை அடுத்து காசாவின் தொலைதொடர்பு கேபிள் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால், இணையதள சேவை பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், காசா நகருக்கு செயற்கைக்கோள் மூலம் இணைய சேவையை ஸ்டார் லிங்க் வழங்க இருக்கிறது. எலான் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரின்போது, இதேபோன்று இணையதள சேவையை மஸ்க் வழங்கினார். இதன்படி, காசாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச உதவி குழுக்களுக்கு இணையதள சேவையை வழங்க மஸ்க் முடிவு செய்திருக்கிறார்.

2023-10-28 12:43 GMT

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான மோதல் 22-வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், ஷிபா மருத்துவமனைக்கு கீழே ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் தலைமையகங்களை அமைத்து செயல்பட்டு வருகின்றனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியுள்ளது.

காசா மக்களின் அடிப்படை தேவைகளான எரிபொருள், ஆக்சிஜன், நீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்டவற்றை பயங்கரவாதத்திற்காக அந்த பயங்கரவாத குழு பயன்படுத்தி வருகிறது என்றும் கூறியுள்ளது.

2023-10-28 08:59 GMT

வடக்கு காசா முனை பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் போர் விமானங்களின் உதவியுடன், ஹமாஸ் அமைப்பின் 150 பதுங்கு குழிகளை இலக்காக கொண்டு அதிரடி தாக்குதல்களை தொடுத்துள்ளது.

இந்த தாக்குதல்களில் பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். எதிரிகளின் சுரங்கங்கள், பதுங்கு குழி பகுதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் பதுங்கு குழி உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன என இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

2023-10-28 06:37 GMT

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் டிரோன் பிரிவு தளபதி பலி

கடந்த 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். ராக்கெட்டுகளை ஏவியும், ஆளில்லா விமானங்கள், டிரோன்கள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டது. பாராகிளைடர் மூலமும் காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,405 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் விமானப்படை இன்று நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் டிரோன் பிரிவு தளபதி அபு அரகபா கொல்லப்பட்டார்.

2023-10-28 04:21 GMT

காசாமுனையில் இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்:

காசாமுனையில் இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து காசாமுனை மீது இஸ்ரேல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. 

2023-10-28 03:11 GMT

காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் - ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்

ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு எதிரான போரில் காசா முனை மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரபு நாடுகள் கூட்டமைப்பு சார்பில் ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகளும், எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்பட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இறுதியில் காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தத்தை அமல்படுத்தக்கோரி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

2023-10-28 02:57 GMT

காசாவில் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிப்பு...!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 22வது நாளாக நீடித்து வருகிறது. இதனிடையே, காசா முனையில் இஸ்ரேல் நேற்று இரவு வான்வழி தாக்குதல் நடத்தியது. தொடர் வான்வழி தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் காசாவில் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இணையதளம், செல்போன் சேவைகள் பெருமளவு துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், காசாவில் உள்ள மக்கள் வெளி உலகத்தொடர்பு இல்லாமல் பெரும் பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

2023-10-28 02:29 GMT

பலி எண்ணிக்கை:

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 7 ஆயிரத்து 326 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 838 ஆக அதிகரித்துள்ளது.

2023-10-28 02:27 GMT

22வது நாளாக தொடரும் போர்:

இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் போர் இன்று 22வது நாளாக நீடித்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்