இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக 6,747 பேரின்... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிப்பு...!
இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக 6,747 பேரின் பெயர்களை வெளியிட்ட ஹமாஸ் அமைப்பு
வடக்கு, தெற்கு மற்றும் மத்திய காசா பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்து வருகின்றன. இதில் கட்டிடங்கள் தரைமட்டமாகி மக்கள் குடும்பம், குடும்பாக இடிபாடுகளில் புதையுண்டு வருகின்றனர்.
இதனால் காசாவில் நிமிடத்துக்கு நிமிடம் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை காசாவில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோயுள்ளன. போரில் பலியானவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் மற்றும் பெண்கள் ஆவர். மேலும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலில் 1,400-க்கும் அதிகமானோர் பலியானதும், பெண்கள், சிறுவர்கள் உள்பட 220-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் அமைப்பினர் சிறைபிடித்து காசா பகுதிக்கு கொண்டு சென்றதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை பிணை கைதிகள் 50 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இது குறித்து இஸ்ரேல் ராணுவம் உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்நிலையில் காசாவில் உள்ள ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம், இஸ்ரேலில் 1,400க்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்த ஹமாஸ் தலைமையிலான தாக்குதலுக்குப் பதிலடியாக, பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் இடைவிடாத குண்டுவீச்சில் கொல்லப்பட்ட 6,747 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
2,665 குழந்தைகள் உட்பட கொல்லப்பட்ட ஒவ்வொரு நபரின் பெயர், வயது, பாலினம் மற்றும் அடையாள எண் ஆகியவை இந்த பட்டியலில் அடங்கும். மேலும் சிலரது உடல்களை அடையாளம் காண முடியாததால் கொல்லப்பட்ட 281 பேரின் பெயர் குறிப்பிடப்படவில்லை, மொத்த பலி எண்ணிக்கை 7,028 ஆக உள்ளது என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.