காங்கோ நாட்டில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 141 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 141 பேர் பலியாகினர்.;

Update:2022-12-15 05:13 IST

கின்ஷாசா,

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தலைநகர் கின்ஷாசாவில் கடந்த திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை வரையில் இடைவிடாது கனமழை கொட்டியது.

விடியவிடிய கொட்டித்தீர்த்த பேய் மழையால் அங்குள்ள நீர்நிலைகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதை தொடர்ந்து ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்தது.

குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ள நீர் ஆயிரக்கணக்கான வீடுகளை மூழ்கடித்தது. நூற்றுக்கணக்கான வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன.

பயங்கர நிலச்சரிவு

சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் சாலைகள், தரைப்பாலங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வாகனங்கள், கால்நடைகள் ஆகியவை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டன.

கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து கின்ஷாசா நகரின் பல்வேறு பகுதிகளில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.

கின்ஷாசாவை நாட்டின் முக்கிய துறைமுகமான மாதாடியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.

141 பேர் பலி

இதனிடையே கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 141 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அந்த நாட்டின் சுகாதார மந்திரி ஜீன் ஜாக்ஸ் மம்புங்கனி மபாண்டா பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், "இந்த திடீர் கனமழை மற்றும் வெள்ளம் கின்ஷாசாவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி விட்டன. இந்த இயற்கை பேரிடரால் சுமார் 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 141 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரிகளிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் அந்த எண்ணிக்கை இன்னும் சரிபார்க்கப்படவில்லை" என்றார்.

பிரதமர் நேரில் ஆய்வு

மேலும் அவர், "வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி மேலும் பலர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன" எனவும் அவர் கூறினார்.

இதனிடையே காங்கோ நாட்டின் பிரதமர் ஜீன்-மைக்கேல் சாமா லுகொண்டே கின்ஷாசாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் மழை, வெள்ளத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்