கொள்ளையனை பிடிக்க உதவிய இந்தியரை கவுரவித்த துபாய் போலீஸ்

கேஷூர் காரா பணிபுரியும் இடத்திற்கு நேரில் சென்று அவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி துபாய் போலீசார் அவரை கவுரவித்தனர்.;

Update:2022-11-26 02:01 IST

Image Courtesy : @DubaiPoliceHQ twitter

துபாய்,

துபாயில் உள்ள தெய்ரா மாவட்டத்தில் கடந்த மாதம் இரண்டு நபர்கள் பைகளில் 42 லட்சத்து 50 ஆயிரம் திர்ஹாம் பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். அவர்களை பின்தொடர்ந்து சென்ற நபர் ஒருவர், அவர்களிடம் இருந்து ஒரு பையை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்.

அப்போது உதவி கோரி அந்த நபர்கள் சத்தம் போட்டுள்ளனர். இதனைக் கேட்டு அந்த பகுதியில் இருந்த கேஷுர் காரா சவாடா காருகேலா, என்ற 32 வயதான இந்தியர் ஒருவர், பணப்பையுடன் தப்பிச் சென்ற கொள்ளையனை மடக்கிப் பிடித்துள்ளார். பின்னர் அந்த இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து கொள்ளையனை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தின் மூலம் 2.7 மில்லியன் திர்ஹாம்(சுமார் 6.6 கோடி ரூபாய்) பணம் கொள்ளை போவதில் இருந்து தடுக்கப்பட்டது. இந்த கொள்ளை முயற்சியை தடுத்த இந்தியரான கேஷூர் காராவை போலீசார் பாராட்டினர்.

மேலும் அவரை கவுரவிக்கும் விதமாக துபாய் போலீசார், கேஷூர் காரா பணிபுரியும் இடத்திற்கு நேரில் சென்று அவருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கி கவுரவித்தனர். தனது நண்பர்கள் மற்றும் சக பணியாளர்கள் முன்பு துபாய் போலீசார் தன்னை கவுரவித்தது மறக்க முடியாத அனுபவம் என கேஷூர் காரா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்