அரசின் சட்டங்களை மதிப்பதை தவிர வேறு வழியில்லை - டுவிட்டர் விவகாரத்தில் எலான் மஸ்க்
டுவிட்டர் கணக்குகளை முடக்க இந்திய அரசு தனக்கு அழுத்தம் கொடுத்ததாக டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜாக் டொர்சி குற்றஞ்சாட்டினார்.
வாஷிங்டன்,
டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜாக் டொர்சி கடந்த வாரம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் 2020-21ம் ஆண்டில் நடந்த விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பல்வேறு கணக்குகளை டுவிட்டர் தலத்தில் இருந்து நீக்குமாறு இந்திய அரசு டுவிட்டர் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்தது.
அதேபோல், அரசை விமர்சிக்கும் டுவிட்டர் கணக்குகளையும் நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் இந்தியாவில் உள்ள டுவிட்டர் நிறுவனங்கள் மூடப்படும் என்றும், டுவிட்டர் நிறுவனத்தின் வீடுகளில் சோதனைகள் நடைபெறும் என்றும் இந்திய அதிகாரிகள் மிரட்டியதாக ஜாக் டொர்சி கூறினார்.
டுவிட்டர் நிறுவனத்தில் முன்னாள் தலைவர் இந்திய அரசு மீது குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் இது குறித்து டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரும், டெஸ்லா தலைவருமான எலான் மஸ்க் இடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், உள்நாட்டு சட்டதிட்டங்களை பின்பற்றுவதை தவிர டுவிட்டருக்கு வேறு வழியில்லை. அமெரிக்காவில் உள்ள சட்டங்களை ஒட்டுமொத்த உலகத்திற்கும் பொறுத்திப் பார்க்க முடியாது.
ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் வெவ்வேறு சட்ட திட்டங்கள் உள்ளன. சட்டப்படி கருத்து சுதந்திரத்தை சிறந்த முறையில் அளிக்க நாங்கள் எங்களால் முயன்ற முயற்சிகளை மேற்கொள்வோம்' என்றார்.
முன்னதாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடியை எலான் மஸ்க் சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.