நோபல் பரிசு வென்ற ஸ்வாந்தே பாபோவை குளத்தில் தூக்கி வீசிய சக பணியாளர்கள்; வைரலான வீடியோ
நோபல் பரிசு பெற்ற ஸ்வாந்தே பாபோவை சக பணியாளர்கள், கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குளத்தில் தூக்கி வீசினர்.;
பெர்லின்,
நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீசன் மருத்துவ விருதுடன் தொடங்கியது. 2022-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்வாண்தே பாபோவிற்கு "அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக" அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த திறமையான பணிக்காக பாபோவை பாராட்டுவதற்காக ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் மையத்திற்கு அவரது சக பணியாளர்கள் வந்துள்ளனர். இதனால் நாங்கள் பரவசமும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளோம் என அந்த அமைப்பு சார்பில் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டு, சக பணியாளர்களுக்கு பாபோ நன்றி தெரிவிக்கும் வகையில் குனிந்து வணங்கும் வீடியோவும் பகிரப்பட்டது.
ஆனால், இந்த கொண்டாட்டம் இதனுடன் முடியவில்லை. பொதுவாக, இந்த மையத்தில் பி.எச்டி பட்டம் பெறுபவர்களுக்கு மரியாதை செலுத்த என பாரம்பரிய முறையில் சில விசயங்கள் நடத்தப்படும். அவர்களை அந்த மையத்தில் உள்ள குளத்தில் தூக்கி வீசுவது வழக்கம்.
பாபோ, நோபல் பரிசு பெற்ற நிலையில், இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் அவருக்கும் இதே மரியாதையை வழங்க சக பணியாளர்கள் முடிவு செய்தனர்.
இதன்படி, பாபோவை 3 சக பணியாளர்கள் தூக்கி சென்று குளத்தில் வீசியுள்ளனர். அவர், குளத்தில் தத்தளித்தபடி காணப்படுகிறார். இந்த வீடியோ, நோபல் பரிசு அமைப்பின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. சில புகைப்படங்களையும் மேக்ஸ் பிளாங் மையம் வெளியிட்டு உள்ளது.