இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா
இங்கிலாந்து துணை பிரதமட் டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
லண்டன்,
இங்கிலாந்து நாட்டின் துணை பிரதமரும், நீதித்துறை மந்திரியுமான டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். டொமினிக் ராப் தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துவதற்காக மூத்த வழக்கறிஞர் ஆடம் டாலி என்பவரை கடந்த நவம்பர் மாதம் ரிஷி சுனக் நியமித்தார். இந்த விசாரணையின் அறிக்கையை பிரதமரிடம் கடந்த வியாழக்கிழமை ஆடம் டாலி சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் துணை பிரதமட் டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "நான் விசாரணைக்கு அழைப்பு விடுத்தேன், அதில் ஏதேனும் கொடுமைப்படுத்துதல் கண்டறியப்பட்டால், ராஜினாமா செய்வதாக உறுதியளித்தேன். என் சொல்லைக் காப்பாற்றுவது முக்கியம் என்று நான் நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவியேற்ற பிறகு, அவரது அமைச்சரவையில் இருந்து விலகிய 3-வது முக்கிய நபர் டொமினிக் ராப் ஆவார். இது குறித்து ரிஷி சுனக் செய்தியாளர்களிடம் பேசிய போது, தனக்கு டொமினிக் ராப் மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும், அதே நேரம் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களின் உண்மைத் தன்மையை கவனத்தில் எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.