பிரபல சாப்ட்வேர் நிறுவன முதலாளியின் மனைவியுடன் டேட்டிங்கில் பில் கேட்ஸ்...

2 ஆண்டுகளுக்கு முன் மனைவியை விவாகரத்து செய்த பில் கேட்ஸ், பிரபல சாப்ட்வேர் நிறுவன முதலாளியின் மனைவியுடன் டேட்டிங்கில் ஈடுபட்டு உள்ளார்.;

Update:2023-02-09 18:11 IST



வாஷிங்டன்,


அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ். அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும் ஆவார். கேட்சின் முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ்.

இந்த தம்பதி 27 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதத்தில் விவாகரத்து செய்ய முடிவு எடுத்தனர். இதுபற்றி பில் கேட்ஸ் தம்பதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம்.

உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதனால் அனைத்து தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான வழிகள் செய்து வரப்பட்டு உள்ளன. இந்த பணியில் இணைந்து தொடர இருக்கிறோம். எனினும், எங்களது திருமண வாழ்வை முடித்து கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்து உள்ளனர்.

கடந்த 1975ம் ஆண்டு பால் ஆலன் உடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கிய காலத்தில் அதன் தலைமை செயல் அதிகாரியாக பில் கேட்ஸ் செயல்பட்டார். பின்னர் அதன் தலைவர் மற்றும் தலைமை மென்பொருள் வடிவமைப்பாளர் ஆகிய பதவிகளிலும் இருந்துள்ளார்.

அந்நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த மெலிண்டா கேட்சை சந்தித்த, பில் கேட்ஸ் பின்னர் ஹவாயில் வைத்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் 6 ஆண்டுகள் கழித்து, கடந்த 2000ம் ஆண்டு பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

லாபநோக்கு இல்லாத இதன் வழியே கல்வி, பாலின சமத்துவம் மற்றும் சுகாதார நலம் போன்ற சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், இருவரும் விவாகரத்து செய்யும் முடிவை அறிவித்தனர். இத்தனை வயதுக்கு பின்னர் இந்த முடிவை அவர்கள் எடுத்து உள்ளதற்கு, அப்போது பலரும் தங்களது வருத்தங்களை வெளியிட்டனர்.

இந்நிலையில், அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட பீப்புள் மேகசீன் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், ஆரக்கிள் சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஹர்த்.

ஹீவ்லெட்-பேக்கார்டு நிறுவனத்தின் முன்னாள் முதலாளியாகவும் இருந்தவர். இவரது மனைவி பவுலா ஹர்த். இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு மார்க் ஹர்த் உயிரிழந்து விட்டார்.

இந்த நிலையில் பவுலாவுடன், பில் கேட்ஸ் டேட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார் என தெரிவித்து உள்ளது. இருவரும் டேட்டிங்கில் உள்ளனர் என பரவலாக தெரியும். ஆனால், கேட்சின் குழந்தைகளை பவுலா இன்னும் சந்திக்கவில்லை என்றும் தெரிவித்து இருக்கிறது.

கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் இறுதியில் பில் கேட்ஸ் மற்றும் பவுலா அடுத்தடுத்து அமர்ந்திருந்த புகைப்படங்கள் வெளிவந்தன.

இந்த டேட்டிங் செய்தியானது, பில் கேட்ஸ் தனது முன்னாள் மனைவியான மெலிண்டா பிரெஞ்சு கேட்சை விவாகரத்து செய்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் தெரிய வந்து உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டில் இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்