ரஷியாவில் ஏர் இந்தியா விமான பயணிகள்; உணவு, மருந்து வசதி இன்றி தவிப்பு

என்ஜின் கோளாறால் ரஷியாவில் தரையிறங்கிய டெல்லி ஏர் இந்தியா விமானத்தின் பயணிகள் உணவு, மருந்து வசதி இன்றி தவித்து வருகின்றனர்.

Update: 2023-06-07 11:25 GMT

மகதன்,

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர் நோக்கி ஏ.ஐ.173 என்ற எண் கொண்ட ஏர் இந்தியாவின் போயிங் 777 ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்று உள்ளது.

இந்த விமானத்தில் 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணம் செய்து உள்ளனர். இந்நிலையில், விமானத்தில் என்ஜின்களில் ஒன்று நேற்று திடீரென பழுதடைந்து உள்ளது என கூறப்படுகிறது.

இதனால், ரஷியாவின் மகதன் விமான நிலையம் நோக்கி ஏர் இந்தியா விமானம் திருப்பி விடப்பட்டது. இதனை தொடர்ந்து விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

இதுபற்றி ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ரஷியாவின் மகதன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பின்னர், பயணிகள் அனைவருக்கும் தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டு உள்ளன என கூறினார்.

அவர்கள் சென்று சேரவேண்டிய இடத்திற்கு விரைவாக செல்வதற்கான மாற்று வழிகளையும் செய்து தருவோம். விமானத்தில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் கூறினார்.

இந்த நிலையில், ரஷியாவில் ஏர் இந்தியா விமான பயணிகளுக்கு போதிய அளவில் வசதிகள் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகிறது.

விமானத்தில், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் என அனைத்து தரப்பினரும் பயணித்து உள்ளனர். அவர்களை பஸ்களில் அழைத்து சென்று பள்ளி மற்றும் கல்லூரிகளில் தங்க வைத்து உள்ளனர்.

அவர்களுக்கு பெரும்பாலும் கடல் உணவே கிடைக்கிறது என கூறுகின்றனர். சிலர் ரொட்டியும், சூப்பும் மட்டுமே சாப்பிட்டு உள்ளனர். முதியவர்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை.

பள்ளியில் தங்க வைக்கப்பட்ட பயணிகள், தரையில் விரிப்பை விரித்து ஒரே அறையில், 20 பேர் என்ற கணக்கில் படுத்து உள்ளனர். சரியான உணவு வசதி இல்லை. அவர்களுக்கு கோக் மற்றும் ரொட்டி அளிக்கப்பட்டு உள்ளது பயணி ஒருவர் கூறியுள்ளார்.

ரஷியாவில் மற்றவர்களிடம் பேசுவதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஆனால், அந்நாட்டு அதிகாரிகள் நல்ல முறையில் நடந்து கொள்கின்றனர் என கூறியுள்ளார்.

கல்லூரியில் தங்கிய பயணிகளுக்கு வைபை வசதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், அவர்கள் தங்களது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.

மும்பையில் இருந்து மாற்று விமானம் ஒன்று இன்று அனுப்பி வைக்கப்படும் என ஏர் இந்திய விமான நிறுவனம் கூறியுள்ளது. அந்த விமானத்தில் மகதன் நகரில் இருந்து பயணிகள் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

விமானத்தில் அமெரிக்க நாட்டு மக்களும் உள்ள சூழலில், நிலைமையை நாங்கள் கவனித்து வருகிறோம் என அமெரிக்க வெளியுறவு துறை கூறியுள்ளது.  வேறொரு விமானம் வருவதற்கும், தரையிறங்குவதற்கும் ரஷிய விமான போக்குவரத்து கழகம் அனுமதி அளித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்