வங்காளதேசத்தில் ஒரு ஷ்ரத்தா வாக்கர் சம்பவம்; காதலியை பல துண்டுகளாக கூறு போட்ட திருமணம் ஆன நபர்

வங்காளதேசத்தில் மணமுடித்த தகவலை மறைத்தது பற்றி கேள்வி கேட்ட, காதலியை கொன்று, பல துண்டுகளாக நபர் ஒருவர் கூறு போட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.;

Update:2022-11-20 18:50 IST


டாக்கா,


சமீபத்தில் டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் எனும் இளம் பெண் தனது காதலன் அப்தாப் அமீன் பூனாவல்லா என்பவரால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவம் மே மாதம் நிகழ்ந்துள்ளது. காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி கூறுபோட்டுள்ளார். இந்த நிலையில், வங்காளதேசத்தில் இதேபோன்று மற்றொரு குலைநடுங்க வைக்கும் கொலை சம்பவம் நடந்து உள்ளது.

இந்திய எல்லையை ஒட்டிய வங்காளதேச நாட்டை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். இவரது மனைவி சப்னா. திருமணம் முடிந்த இவர்கள் இருவரும் நான்கு ஆண்டுகளாக கோபர்சக்கா சதுக்கம் பகுதியில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

கவிதா ராணி என்ற இந்து பெண்ணுடனும் அபுபக்கர் தொடர்பில் இருந்துள்ளார். சப்னா வேலைக்காக வெளியே செல்லும்போது, வீட்டில் தனியாக இருந்த அபுபக்கர், வீட்டிற்கு வரும்படி ராணியை அழைப்பது வழக்கம். எனினும், அபுபக்கருக்கு திருமணம் நடந்தது ராணிக்கு தெரியாது.

இந்த நிலையில், அபுபக்கருக்கு திருமணம் முடிந்து மனைவி இருப்பது தெரிந்து, கடந்த 5 நாட்களுக்கு முன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அபுபக்கர், ராணியை கொலை செய்து உள்ளார். அவரது தலையையும் துண்டித்து உள்ளார். கைகளையும் வெட்டி பிளாஸ்டிக் பையில் போட்டு, சாக்கடையில் வீசி சென்றுள்ளார்.

வங்காளதேசத்தின் குல்னா மாவட்டத்தில் சோனாடங்கா பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது என வங்காளதேச இந்துக்களுக்கான குரல் என்ற அமைப்பு டுவிட்டரில் தெரிவித்து உள்ளது. வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

அந்த பதிவில், நாவ்காவன் மாவட்ட நீதிபதி ஹசன் மஹ்முதுல் இஸ்லாம், தொடர்ந்து இந்துக்களை மலான் என அழைத்து வந்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தபோது, வங்காளதேச மற்றும் இந்திய இந்துக்களை அவர் மலான்கள் என குறிப்பிட்டார் என்று டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வங்காளதேசத்தின் ரங்பூரில் காளி கோவில் ஒன்றில் காளி சிலையை கிளர்ச்சியாளர்கள் சிலர் சேதப்படுத்தி உள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது. சமீபத்தில், டெல்லியில் அப்தாப் என்ற வாலிபர், 28 வயது காதலி ஷ்ரத்தா வாக்கர் என்பவரை 35 துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் நடந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்