வடகொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானில் விழுந்ததால் பரபரப்பு
வடகொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.;
டோக்கியோ,
வடகொரியா தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களை கொண்டு பிராந்திய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை நீண்டகாலமாக அச்சுறுத்தி வருகிறது. மேலும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பகிரங்கமாக பல்வேறு ஏவுகணை சோதனைகளையும் வடகொரியா நடத்தி வருகிறது.
இந்நிலையில் வடகொரியா ஏவிய ஏவுகணை, ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை கிழக்கு கடற்கரையில் இருந்து ஹொக்கைடா மாகாணத்தின் மேற்கு ஒஷிமா தீவு அருகே விழுந்ததாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ள தகவலின்படி, அதிகாலை 5.21 மணிக்கு ஏவப்பட்ட ஏவுகணை, 66 நிமிடங்கள் வானில் பறந்து 6.27 மணிக்கு கடலில் விழுந்ததாகவும், சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை சோதனையானது வடகொரியாவின் எதிர்தாக்குதல் திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனவும், கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் வகையிலான ஏவுகணை முழு திறனை எட்டியிருப்பது உறுதியாகி இருப்பதாகவும் வடகொரியா அரசின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.