பாகிஸ்தானில் 74 சதவீதத்தினர் செலவுக்கு வழியின்றி தவிப்பு; ஆய்வில் தகவல்
பாகிஸ்தானில் 10 சதவீதத்தினர், வருவாயை ஈடு கட்டும் வகையில் பகுதிநேர வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.;
கராச்சி,
பாகிஸ்தான் நாட்டில் மக்கள் தொகை ஏறக்குறைய 24 கோடியாக உள்ளது. அவர்களில் பலர் செலவுக்கு வழியின்றி தவித்து வரும் சூழல் காணப்படுகிறது. இதுபற்றி வெளியான ஆய்வு அறிக்கை ஒன்றில், 56 சதவீத மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு செலவிட்ட பின்னர் சேமிப்பதற்கு முடியாத சூழலில் உள்ளனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் அந்த நாட்டில், கடந்த ஆண்டில் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருபவர்களின் எண்ணிக்கை 14 சதவீத நகரவாசிகள் என்ற அளவில் அதிகரித்து உள்ளது. இதன் விளைவால், நாட்டின் நகர மக்கள் தொகையில் 74 சதவீதம் பேர், அவர்கள் பெறும் வருவாயை வைத்து கொண்டு மாத செலவுகளை கூட எதிர்கொள்ள முடியவில்லை.
கடந்த ஆண்டு மே மாதத்தில் 60 சதவீதம் என்ற அளவில் இந்த எண்ணிக்கை இருந்தது. இது நடப்பு ஆண்டில் 74 சதவீதம் என அதிகரித்து உள்ளது. இதனால், மளிகை பொருட்கள் உள்பட அத்தியாவசிய செலவுகளை கூட அவர்கள் நிறுத்தி உள்ளனர் என தெரிய வந்துள்ளது. 40 சதவீதத்தினர் நெருங்கியவர்களிடம் இருந்து கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
10 சதவீதத்தினர், வருவாயை ஈடு கட்டும் வகையில் பகுதிநேர வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.