நேபாளம் நிலச்சரிவு - 7 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இரண்டு பஸ்களிலும் 63 பயணிகள் பயணம் செய்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.

Update: 2024-07-12 09:01 GMT

காத்மாண்டு,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கனமழை கொட்டி வருகிறது. நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, மதன் - ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, இன்று அதிகாலை 3.30 மணியளவில், சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு பஸ்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.

சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது, கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு, சாலையின் பெரும்பகுதி ஆற்றில் வெள்ளப்பெருக்குடன் அடித்துச் செல்லப்பட்டபோது, சாலையில் சென்று கொண்டிருந்த பஸ்களும் ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இரண்டு பஸ்களிலும் 63 பயணிகள் பயணம் செய்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. மீட்பு பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஆற்றில் பஸ்கள் அடித்துச்செல்லப்பட்ட விபத்தில் 7 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மற்ற பயணிகளின் நிலை என்ன? என்று தெரியவில்லை. மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்