துபாயில் கண்ணெதிரே காணாமல் போன உலகின் உயரமான கட்டிடம்!
உலகின் மிக உயரமான கட்டிடம் இன்று சாம்பல் நிற தூசிக்கு பின்னால் மறைந்துவிட்டது.;
துபாய்,
உலகின் மிக உயரமான கட்டிடம் இன்று சாம்பல் நிற தூசிக்கு பின்னால் மறைந்துவிட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் புழுதிப்புயல் வீசுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக, துபாயின் எந்த பகுதியில் நின்றாலும், 828-மீட்டர் (2,716 அடி, 6 அங்குலம்) உயர கட்டிடமான புர்ஜ் கலீபா, நம் பார்வைக்கு தென்படும். ஆனால், மணலை அள்ளி வீசிய புழுதிப்புயலால், துபாயின் புர்ஜ் கலீபா தூசிக்கு மத்தியில் மறைந்தது. அந்த அளவிற்கு புழுதிப்புயலின் தீவிரம் அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில், மணல் புயல் அடிக்கடி ஏற்படும் காலநிலை நிகழ்வாக மாறியுள்ளது. மேலும் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்திய நாட்களில் ஈராக், குவைத், சவுதி அரேபியா, ஈரான் மற்றும் பிற நாடுகளில் கடுமையான புழுதிப்புயல் வீசியது. மணல் புயல் காரணமாக, விமான நிலையங்கள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன மற்றும் ஆயிரக்கணக்கானோர் சுவாசக் கோளாறுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பப்பட்டனர்.
அதிகப்படியான மேய்ச்சல் மற்றும் காடுகளை அழித்தல், ஆற்று நீரை அதிகப்படியாக பயன்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு காலநிலை இயற்கை நிகழ்வாக புழுதிப்புயல் உருவெடுத்துள்ளது. காலநிலை மாற்றம் தான் இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
புழுதிப்புயலால் ஏற்படும் அதிக காற்று மற்றும் தூசியால், குறைந்த தெளிவுநிலை மற்றும் பார்வைக்குறைவு ஏற்படும் என்பதால், வாகன ஓட்டிகளை எச்சரிக்கையாக இருக்குமாறு அமீரக தலைநகர் அபுதாபி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
புழுதிப்புயலால் அமீரகத்தின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளும், தூசியால் மூடப்பட்டது போல் காட்சியளிக்கிறது.மணிக்கு 40 கிலோமீட்டர் (25 மைல்) வேகத்தில் காற்று புழுதியை வீசுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் மற்றொரு புழுதிப்புயல் அமீரகத்தில் ஏற்படும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.