தென்சீனக்கடலை சீனா உரிமை கொண்டாடுவது சர்வதேச விதிகளுக்கு முரணானது - கொள்கை முடிவை வெளியிட்டது அமெரிக்கா
தென்சீனக் கடலை சீனா உரிமை கொண்டாடுவது சர்வதேச விதிகளுக்கு முரணானது என அமெரிக்கா கொள்கை முடிவை வெளியிட்டுள்ளது.
பீஜிங்,
தென் சீனக்கடலில் உள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் அந்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என ஜப்பான், வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன.
இந்த விவகாரத்தில் சீனாவுக்கும் மேற்கூறிய நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவுடன் மோதலில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கிறது.
ஆனாலும் சீனா தென் சீனக்கடல் பகுதியில் தொடர்ந்து தனது ஆக்கிரமிப்பை அதிகப்படுத்தி வருகிறது.
இந்த சூழலில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா, யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் மற்றும் யு.எஸ்.எஸ் ரொனால்ட் ரீகன் ஆகிய 2 போர்க் கப்பல்களை தென் சீனக் கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தது.
வர்த்தக போர், கொரோனா விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள சூழலில் தற்போது தென் சீனக்கடல் விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.
இந்த நிலையில் தென்சீனக்கடல் பகுதியில் உள்ள வளங்கள் மீது சீனா உரிமை கொண்டாடி வருவது சர்வதேச விதிகளுக்கு முரணானது என்றும், சீனாவின் இந்த உரிமைகளையும், கோரிக்கைகளையும் அமெரிக்கா முற்றிலும் நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பான கொள்கை அறிவிப்பை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தென் சீனக்கடலில் சீனாவின் உரிமை கொண்டாடல்கள் அனைத்தும் விதிகளுக்கு முரணானது. தென் சீனக்கடல் பிராந்தியத்தை ஒட்டி சீனாவின் எல்லை உள்ளது, அதற்காக அந்த எல்லைக்கு வெளியே உள்ள கடல் பிராந்தியத்தை சீனா உரிமை கொண்டாடுவது தவறு. தென்சீனக் கடலை அதன் கடல் சாம்ராஜ்யமாக சீனா கருதுவதை இனியும் உலகம் அனுமதிக்காது. அமெரிக்கா தனது தென்கிழக்கு ஆசிய நட்பு நாடுகளுடனும், அவர்களின் இறையாண்மை, வளங்களுக்கான மற்றும் அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியாக நிற்கிறது. சர்வதேச சட்டத்தின் கீழ் அவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு இணங்க, கடல்களில் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை மதித்தல் ஆகியவற்றில் சர்வதேச சமூகத்துடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது.
தென் சீன கடலில் அதன் பரந்த பிராந்தியத்தில் சீனா தனது ராணுவ வலிமையை காட்டி தன்னுடைய கொள்கைகளை சிறிய அண்டை நாடுகள் மீது திணிப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் இனி அமெரிக்கா எதிர்க்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் இந்தக் கொள்கை முடிவு முற்றிலும் நியாயமற்றது என கூறி சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தென் சீனக்கடலில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு சீனா மற்றும் ஆசியான் நாடுகளின் முயற்சிகளைப் புறக்கணிக்கும் ஒரு அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது. இது கடல் சட்டம் தொடர்பான ஐ.நா. சபையின் தீர்மானம் உள்ளிட்ட உண்மைகளையும் சர்வதேச சட்டத்தையும் வேண்டுமென்றே சிதைக்கிறது. சீனாவுக்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் இடையில் முரண்பாட்டை விதைக்க முயற்சிக்கிறது. சீனா மீதான குற்றச்சாட்டு முற்றிலும் நியாயமற்றது. சீனத் தரப்பு இதை உறுதியாக எதிர்க்கிறது” எனக் கூறினார்.