அமேசான் காடுகளையும் விட்டுவைக்காத கொரோனா: பழங்குடியின சிறுவனை வைரஸ் தாக்கியது
அமேசான் காடுகளில் வசிக்கும் யனோமாமி இனத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;
பிரேசிலியா,
கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் உலகையே பயமுறுத்தி வருகிறது. உலகளவில் இந்த கொடிய வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது. 16 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
சுமார் 200 நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது அமேசான் காடுகளுக்கும் நுழைந்துவிட்டது. யனோமாமி என அழைக்கப்படும் பழங்குடியினத்தவர்கள் அமேசான் காடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் வெளியுலக தொடர்பு இல்லாதவர்கள்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா, இவர்களயும் விட்டுவைக்கவில்லை. யனோமாமி இனத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள பிரேசில் வெளியுறவுத்துறை மந்திரி லூயிஸ் ஹென்ரிக் மேன்டெட்டா, தற்போது அந்த சிறுவன் ரோரைமா மாகாணத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.