அமெரிக்காவில் களைகட்டும் வெட்டுக்கிளி பீட்சா விற்பனை

நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரை நோக்கி வெட்டுக்கிளிகள் கூட்டம், கூட்டமாக படையெடுக்கத் தொடங்கியுள்ளன.

Update: 2019-08-01 22:38 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் அதிகம் வாழும் பாலைவன இனமான வெட்டுக்கிளிகள் பருவ நிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு இடம் பெயர்வது வழக்கம். அந்த வகையில் தற்போது, மேற்கு மாகாணமான நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரை நோக்கி வெட்டுக்கிளிகள் கூட்டம், கூட்டமாக படையெடுக்கத் தொடங்கியுள்ளன.

லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் அந்த நகரை ஆக்கிரமித்து இருப்பதால் வானிலை ஆய்வுக்கான ரேடார்களில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரவு நேரத்தில் ஓட்டல்கள் மற்றும் கடைகளில் ஒளிரும் வண்ண விளக்குகளை கூட்டமாக சூழ்ந்து கொண்டு வட்டமடிக்கும் வெட்டுக்கிளிகளால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வதும் சவாலாக உள்ளதாகவும், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் மிகுந்து அவதிக்குள்ளாகி இருப்பதாகவும் லாஸ் வேகாஸ் நகர மக்கள் கூறுகின்றனர். அதே சமயம் அந்த நகரில் உள்ள உணவகங்கள் வெட்டுக்கிளி படையெடுப்பை தங்களுக்கு சாதகமாக்கி, பணம் சம்பாதித்து வருகின்றன.

கூட்டம் கூட்டமாக சூழ்ந்திருக்கும் வெட்டுக்கிளிகளை பிடித்து, அவற்றை பக்குவமாக சமைத்து பீட்சாவின் மேல் பரப்பி விற்பனை செய்கின்றன. வித்தியாசமான சுவைக்காக மக்கள் அந்த பீட்சாவை விரும்பி வாங்கி சாப்பிடுகிறார்கள். இதற்கிடையே, இன்னும் ஒரு சில வாரங்களுக்கு லாஸ் வேகாஸ் நகரை வெட்டுக்கிளிகள் சூழ்ந்திருக்கும் என்றும், அதன்பிறகு அவை வடக்கு நோக்கி இடம் பெயரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்