கத்தார் நாட்டின் மீதான தடையை விலக்க 13 நிபந்தனைகள் வளைகுடா நாடுகள் விதித்தன

கத்தார் நாடு பயங்கரவாதத்துக்கு துணை போகிறது, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்கிறது என்பது வளைகுடா நாடுகளின் குற்றச்சாட்டு.

Update: 2017-06-23 21:30 GMT
துபாய்,

இந்த குற்றச்சாட்டின்பேரில் அந்த நாட்டுடனான தூதரக உறவினை சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து ஆகிய நாடுகள் கடந்த 5-ந் தேதி முறித்துக்கொண்டன.

ஆனால் தன் மீது சுமத்தப்படுகிற குற்றச்சாட்டுகளை கத்தார் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இருப்பினும் கத்தாருக்கும், வளைகுடா நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து வைக்கும் நடவடிக்கையில் குவைத் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக கத்தாருக்கு வளைகுடா நாடுகள் 13 நிபந்தனைகளை விதித்துள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை, அல் ஜசிரா தொலைக்காட்சி நிறுவனத்தை மூடி விட வேண்டும், ஈரானுடனான உறவை குறைத்துக்கொள்ள வேண்டும், சகோதரத்துவ அமைப்பு, ஐ.எஸ். இயக்கம், ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கம், ஜபாத் பட்டே அல் ஷாம் இயக்கம் ஆகியவற்றுடனான உறவை முறித்துக்கொள்வதாக அறிவிக்க வேண்டும் என்பதாகும்.

வளைகுடா நாடுகள் இந்த நிபந்தனைகள் அடங்கிய பட்டியலை குவைத் மூலம் கத்தார் நாட்டிடம் வழங்கி உள்ளன. இதற்கு பதில் அளிக்க கத்தாருக்கு 10 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளன.

இது குறித்து கருத்து கேட்டபோது, கத்தார் அதிகாரிகள் பதில் ஏதும் கூற மறுத்து விட்டனர்.

ஆனால் கத்தார் வெளியுறவு மந்திரி ஷேக் முகமது பின் அப்துல் ரகுமான் அல் தானி, “கத்தார் மீதான நடவடிக்கையை அந்த நாடுகள் கைவிடாதவரையில் சமரச பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை” என்று கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்