கம்போடியாவில் இருந்து புதுக்கோட்டைக்கு திரும்பிய வாலிபர்கள் புகார்

கம்போடியா நாட்டில் அதிக சம்பளத்தில் வேலை எனக்கூறி மோசடி செய்ததாக புதுக்கோட்டைக்கு திரும்பிய வாலிபர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தனர். மேலும் வெளிநாட்டில் தமிழகத்தை சேர்ந்தவரே ஏஜெண்டாக இருந்து ஏமாற்றுவதாக வேதனை அடைந்தனர்.

Update: 2022-11-02 18:18 GMT

கம்போடியாவில் வேலை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்கள் அனுப்பும் ஏஜெண்டாக இருந்து வருகிறார். கம்போடியா நாட்டில் முட்டை நிறுவனத்தில் மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் வேலை எனவும், கால் சென்டரில் மாதம் ரூ.90 ஆயிரம் சம்பளம் என கூறி வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்திருக்கிறார்.

இதனை நம்பி நாகுடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 41) என்பவர் பாலசுப்பிரமணியனிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கமலக்கண்ணன், மன்சூர் உள்பட 5 பேரும், முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த 3 பேரும், சென்னை, கோவையை சேர்ந்த தலா ஒருவரும் என பாலசுப்பிரமணியனிடம் தலா ரூ.2 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளனர். கடந்த ஆகஸ்டு மாதம் 11 பேரும் கம்போடியா நாட்டிற்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு வேலைஎதுவும் கொடுக்காமல் ஒரு அறையில் தங்க வைத்திருக்கின்றனர்.

7 பேர் திரும்பினர்

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக வேலை எதுவும் வழங்காததால் அவர்கள் ஏஜெண்டு பாலசுப்பிரமணியனிடம் கூறி தங்களை சொந்த ஊருக்கு வர ஏற்பாடு செய்ய கூறினர். மேலும் தங்களது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்து பயணத்திற்கான விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தனர். இதில் சுரேஷ், கமலக்கண்ணன் உள்பட 7 பேர் நேற்று சொந்த ஊர் திரும்பினர். அவர்கள் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் தங்களை கம்போடியா நாட்டில் வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறி, அங்கு எதுவும் வேலை வழங்காமல் மோசடியில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சொந்த ஊர் திரும்பிய சுரேஷ் கூறியதாவது:- இங்கிருந்து கம்போடியா சென்றதும் அங்கு ஒரு தமிழர் விமானநிலையத்தில் எங்களை வரவேற்று ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே வடமாநிலத்தினர், தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் தங்கியிருந்தனர்.

2 வேளை மட்டும் உணவு

நாங்கள் 3-வது மாடியில் தங்க வைக்கப்பட்டோம். கம்பெனிக்காரர்கள் வந்து வேலை வழங்கி அழைத்து செல்வதாக கூறி எங்களது 11 பேரின் பாஸ்போர்ட்டுகளையும் அவர்கள் வாங்கி வைத்துக்கொண்டனர். நாட்கள் சென்றதே தவிர எங்களை வேலைக்கு எதுவும் அழைத்து செல்லவில்லை.

இது தொடர்பாக இங்குள்ள ஏஜெண்டிடம் கேட்ட போது அவர்கள் கம்பெனிக்காரர்கள் சொல்வதை கேளுங்கள் எனக்கூறிவிட்டார். ஆனால் அங்கு எங்களிடம் வேலைக்கு விரைவில் கூப்பிடுவார்கள். வேலைக்கு செல்லாவிட்டாலும் சம்பளம் உண்டு என்றனர். ஆனால் கடந்த 2 மாதமாக எங்களை வேலைக்கு அழைத்து செல்லவில்லை. தினமும் 2 வேளை மட்டும் சாப்பாடு கொடுத்தனர்.

வேதனை

எங்களிடம் தொடர்பில் இருந்து பேசியவர் தமிழகத்தை சேர்ந்தவர் தான். அவர் அங்கு ஏஜெண்டாக இருக்கிறார். எங்களுக்கு எதுவும் வேலை வழங்காததால் நாங்கள் சொந்த ஊர் திரும்ப தொடர்ந்து கேட்டு அடம்பிடித்து வந்தோம். இன்னும் 4 பேர் அங்கு உள்ளனர். அவர்களும் சொந்த ஊர் திரும்ப அவர்களது குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இங்கிருந்து செல்லும் நபர்களை அங்குள்ள ஏஜெண்டு, கம்பெனிக்காரர்களிடம் குறிப்பிட்ட தொகைக்கு விலைபேசி விடுவார்கள் போல தெரிகிறது. அவர்கள் மோசடி வேலையில் ஈடுபட பயன்படுத்துகின்றனர். வெளிநாட்டு வேலையை நம்பி போனால் அங்கு தமிழகத்தை சேர்ந்தவர்களே நம்ப வைத்து ஏமாற்றுவது வேதனையாக உள்ளது. எங்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய ஏஜெண்டு பாலசுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்துள்ளோம். நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்