குழந்தைகளை கடத்தி கொன்றுவிடுவேன் என நெசவாளரை மிரட்டிய வாலிபர் கைது
குழந்தைகளை கடத்தி கொன்றுவிடுவேன் என நெசவாளரை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. நெசவாளர். இவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி சுந்தரமூர்த்திக்கு போன் செய்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மர்ம நபர், குழந்தைகளை கடத்தி விடுவேன் என பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது ஏதோ தவறான அழைப்பு என சுந்தரமூர்த்தி தவிர்த்துள்ளார்.
தொடர்ந்து 25-ந்தேதி அதே நேரத்தில் மறுபடியும் போன் செய்த அதே நபர், பணம் கேட்டு மிரட்டல் விடுத்து கொடுக்க மறுத்தால் குழந்தைகளை கடத்தி கண்ட துண்டமாக வெட்டி வீசி விடுவேன் என்று தெரிவித்து மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுந்தரமூர்த்தி இதுகுறித்து சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சிவகாஞ்சி போலீசார், மர்ம நபரின் செல்போன் எண் குறித்த விவரங்களை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் சிவகாஞ்சி போலீசார் ஆய்வு செய்தபோது அது பெங்களூரு பகுதியை காட்டியுள்ளது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சபரீஷ் என்ற வாலிபர் விளையாட்டாக ஒரு எண்ணை தனது செல்போனில் அழைக்க அது காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருக்கு சென்றுள்ளது தொடர்ந்து அதே எண்ணுக்கு போன் செய்து மிரட்டி வந்துள்ளார். உடனடியாக பெங்களூரு விரைந்த சிவகாஞ்சி போலீசார் சபரிஷை கைது செய்ய முயன்ற போதும், சுந்தரமூர்த்தியிடம் மிரட்டலாக பேசியுள்ளார்.
இதை தொடர்ந்து சபரீஷை (26) போலீசார் கைது செய்தனர்.