மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

விழுப்புரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-18 18:45 GMT

விழுப்புரம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இவற்றை திருடும் நபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பேரில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மேற்பார்வையில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார், விழுப்புரம் மாம்பழப்பட்டு ரெயில்வே கேட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்ததில் அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த முனுசாமி மகன் சிற்றரசன் (வயது 35) என்பதும், இவர் விழுப்புரம் மேற்கு, நகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 5 மோட்டார் சைக்கிள்களை திருடியதும், இவர் மீது ஏற்கனவே கடலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிற்றரசனை போலீசார் கைது செய்து அவர் கொடுத்த தகவலின்பேரில் 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.



Tags:    

மேலும் செய்திகள்