கர்ப்பிணி மனைவி உள்பட குடும்பத்தினருடன் வாலிபர் தர்ணா

16 முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் கர்ப்பிணி மனைவி உள்பட குடும்பத்தினருடன் வாலிபர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-31 13:32 GMT

16 முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் கர்ப்பிணி மனைவி உள்பட குடும்பத்தினருடன் வாலிபர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சாதி சான்று, உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, பட்டா மாற்றம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். சுமார் 500-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது.

மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டார். மேலும் கடந்த வாரங்களில் பெற்ற மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களிடம் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் பல்வேறு துறை தலைமை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் ராணுவ வீரர்

சென்னை விவேனாந்தர் நகர் பள்ளிக்கரணை குறுக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம், முன்னாள் ராணுவவீரர். இவர் மனு அளிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் செய்யாறு தாசில்தார் ஜீப் வந்தது. திடீரென அவர் அந்த ஜீப்பின் தாசில்தார் இருக்கும்பக்கத்தில் காலில் விழுவது போன்று தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த தாசில்தார் ஜீப் டிரைவரை வெளியே இறங்க செய்து அந்த வழியாக வெளியில் வந்தார். மேலும் அங்கிருந்த போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறுகையில், செய்யாறு தாலுகா கீழ்கொளத்தூர் கிராமத்தில் கிரையம் பெற்ற நிலத்திற்கு பட்டா மாற்றுவதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்து உள்ளேன்.

எந்த விளக்கமும் சொல்லாமல் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர். சர்வேயருக்கு செலான் கட்டியும் இடத்தை சரிவர அளந்து காணப்பிக்காமல் காலம் தாழ்த்தி கொண்டே இருக்கும் அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும்.

மேலும் இதை கண்டு கொள்ளாமல் இருக்கும் தாசில்தாரை கண்டித்து புகார் மனு அளிப்பதற்காக வந்து உள்ளேன். இந்த மனுவை விசாரித்து பட்டா வழங்க வேண்டும் என்றார்.

இதையடுத்து அவரை போலீசார் கூட்டத்திற்கு மனு அளிக்க அழைத்து சென்றனர்.

தர்ணா போராட்டம்

தண்டராம்பட்டு தாலுகா எடத்தனூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தனது நிறைமாத கர்ப்பிணியான மனைவி இந்து மற்றும் மகன், தந்தை, தாய், பாட்டி ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்தில் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவர்களை அங்கிருந்த போலீசார் சமாதானம் செய்து அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறுகையில், நாங்கள் வசித்து வரும் வீட்டின் பட்டா உறவினர் பெயரில் பதிவாகி உள்ளது. அவர் பட்டாவை வேறு ஒருவர் பெயரில் மாற்றம் செய்ய முயற்சி செய்து வருகிறார்.

தவறாக பதிவாகியுள்ள பட்டாவை ரத்து செய்து எங்கள் வீட்டை அவரிடம் இருந்து மீட்டு தரக்கோரி இதுவரை 16 முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றார்.

இதையடுத்து அவர்களை போலீசார் கூட்டத்திற்கு மனு அளிக்க அழைத்து சென்றனர்.

தொடர்ந்து நடைபெற்ற இந்த சம்பவங்களால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

கட்டுமான தொழிலாளர்கள் பாதிப்பு

தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் திருவண்ணாமலை மாவட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாசு தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை தொழிலாளர் நலவாரிய கண்காணிப்பு ஆய்வாளர் அலுவலகத்தில் பல கேட்பு மனுக்கள் நிலுவையில் உள்ளது. திருமண கேட்பு மனு, கல்வி உதவி மனு, இறப்பு மனு போன்ற பல மனுக்கள் சுமார் 5 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் இருப்பதால் கட்டுமான தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனை விரைவில் தீர்க்க கோரியும், இதுவரையில் கண்காணிப்பு குழு அமைக்கப்படாமல் உள்ளதை சரி செய்யவும், தொழிலாளர்களின் உபகரண பொருட்கள் அலுவலகத்திற்கு வந்தும் வழங்காமல் இருப்பதை தர வேண்டிம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பொது வழிபாதை ஆக்கிரமிப்பு

தண்டராம்பட்டு ஒன்றியம் பி.குயிலம் ஊராட்சி மன்ற தலைவர் சீனுவாசன் மற்றும் ஊர் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தில் உள்ள பொது வழிபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது.

அந்த பாதையை அளந்து பொது வழி ஏற்படுத்தக்கோரி தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் முதல்- அமைச்சர் தனிப்பிரிவு ஆகியவற்றில் மனு அளித்தும் தற்போது வரை அளவீடு செய்யப்படவில்லை.

எனவே அந்த இடத்தினை அளவீடு செய்து பொதுபாதை ஏற்படுத்தும் பட்சத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பயன்பெறுவார்கள். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்