ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

திருவோணம் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பலியானார். மேலும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அவரது தம்பியின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது

Update: 2022-07-04 20:35 GMT

ஒரத்தநாடு

திருவோணம் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பலியானார். மேலும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அவரது தம்பியின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது

உறவினர் வீட்டுக்கு வந்தனர்

திருச்சி தாராநல்லூர் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன்கள் தினேஷ்(வயது 21), ராஜேஷ்(18). இவர்களில் தினேஷ், பிளஸ்-2 படித்து விட்டு சிலம்பு பயிற்சி நடத்தி வந்தார். ராஜேஷ் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார்.இவர்கள் இருவரும் உறவினர் வீட்டு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று தஞ்சை மாவட்டம் ஊரணிபுரத்தில் உள்ள அவர்களது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தனர்.

ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

பின்னர் நேற்று மதியம் 1.30 மணியளவில் ஊரணிபுரத்தில் இருந்து உஞ்சியவிடுதிக்கு செல்லும் சாலையில் உள்ள கல்லணை கால்வாய் சைபன் பாலத்திற்கு குளிக்க சென்றனர். தினேஷ், ராஜேஷ் ஆகியோருடன் அவர்களது பெரியம்மா மகன்கள் திருக்குமரன், திருமாறன் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.தினேஷ். ராஜேஷ், திருமாறன் ஆகிய 3 பேரும் ஒரே நேரத்தில் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். திருக்குமரன் மட்டும் கரையில் காத்திருந்துள்ளார். அப்போது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த தினேஷ், ராஜேஷ், திருமாறன் ஆகிய 3 பேரும் தண்ணீர் சுழலில் சிக்கினர். திருமாறன் அவரது அண்ணன் திருக்குமரன் உதவியுடன் மீட்கப்பட்டார். ஆனால் தினேஷ் அவரது தம்பி ராஜேஷ் ஆகிய இருவரும் ஆற்று சுழலில் சிக்கியவாறு தண்ணீரில் மூழ்கினர்.இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கறம்பக்குடி தீயணைப்பு படையினர் ஆற்றில் இறங்கி தினேசை இறந்த நிலையில் பிணமாக மீட்டனர்.

தம்பியை தேடுகின்றனர்

மேலும் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ராஜேசின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஆற்றுக்கு குளிக்க சென்றபோது சுழலில் சிக்கி அண்ணன் இறந்ததும், தம்பி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவரது கதி என்னவென்று தெரியாமல் இருப்பதும் உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்