ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்து திருடிய வாலிபர் கைது
திருக்கோவிலூர் அருகே ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்து திருடிய வாலிபர் கைது
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு சுமார் 3 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். அவ்வாறு விவசாயிகள் எடுத்து வரும் நெல் உள்ளிட்ட தானியங்கள் திருட்டுப்போவதாக புகார் எழுந்தது. இதை விவசாயிகளும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் 50 கிலோ எடையுள்ள உளுந்தை வாலிபர் ஒருவர் திருடிச் செல்ல முயன்றார். இதைப்பார்த்த விவசாயிகள் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திருக்கோவிலூர் அருகே உள்ள வசந்தகிருஷ்ணாபுரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேகர் மகன் அன்பரசன்(வயது 28) என்பதும், உளுந்தை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி செல்ல முயன்றபோது பிடிபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 50 கிலோ உளுந்தையும் பறிமுதல்செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.