மினி பஸ் டிரைவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
கழிவறை சென்றதற்கு பணம் கொடுக்காததால் மினி பஸ் டிரைவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வாக்குவாதம்
கரூர் நல்லதங்காள் ஓடையை சேர்ந்தவர் வெற்றிமுரசு (வயது 26). இவர் மினி பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று கரூர் பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறைக்கு சென்று விட்டு வெளியே வந்தார். அப்போது கழிவறைமுன்பு இருந்த பணியாளர் வெற்றிமுரசுவிடம் கழிவறையை பயன்படுத்தியதற்காக பணம் கேட்டுள்ளார். அப்போது வெற்றி முரசு பணம் கொடுக்காமல் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த நெரூர் பழையூரை சேர்ந்த கபில் (30) என்கிற மற்றொரு மினி பஸ் டிரைவர் இதில் தலையிட்டு வெற்றிமுரசுவிடம் பணத்தை ெகாடுத்து விடுமாறு கூறியதாக கூறப்படுகிறது.
டிரைவருக்கு கத்திக்குத்து
இதனால் ஆத்திரமடைந்த வெற்றிமுரசு, கபிலை தகாத வார்த்தையால் திட்டி, தான் வைத்திருந்த கத்தியால் கபிலை கை தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த கபிலை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கபில் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, வெற்றிமுரசுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.