பண்ருட்டி அருகே அரசு பெண் டாக்டரிடம் 6½ பவுன் சங்கிலி பறிப்பு வாலிபர் கைது
பண்ருட்டி அருகே அரசு பெண் டாக்டரிடம் 6½ பவுன் சங்கிலியை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மருங்கூரை சேர்ந்தவர் வெற்றிவேல் மனைவி மணியரசி(வயது 27). இவர் புலியூர் காட்டுசாகையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பணி முடிந்ததும் மணியரசி மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். சிறுதொண்டமாதேவி மெயின் ரோடு அருகே வந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், மணியரசி ஓட்டி வந்த மொபட்டை மறித்தார்.
பின்னர் அந்த வாலிபர், மணியரசி கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். பறிபோன தங்க சங்கிலியின் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
வாலிபர் கைது
பின்னர் இதுகுறித்து டாக்டர் மணியரசி, காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
அதில் டாக்டர் மணியரசியிடம் தங்க சங்கிலி பறித்தது நெல்லிக்குப்பம் வைடிப்பாக்கத்தை சேர்ந்த விக்கி(30) என தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார், நேற்று முன்தினம் இரவு வைடிப்பாக்கம் சென்று அங்கிருந்த விக்கியை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த தங்க சங்கலியையும் பறிமுதல் செய்தனர்.
டாக்டரிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபரை 24 மணி நேரத்திற்குள் கைது செய்த காடாம்புலியூர் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினார்.