பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறித்த வாலிபர்கள் கைது

திண்டிவனத்தில் பட்டப்பகலில் பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-13 18:45 GMT

திண்டிவனம்

திண்டிவனம் கலைஞர் நகரை சேர்ந்தவர் ரூபசேனா. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் சம்பவத்தன்று தனது இரு சக்கர வாகனத்தில் தீர்த்தக் குளம் பகுதியில் உள்ள அரசு வங்கிக்கு சென்று பணம் எடுத்துக்கொண்டு மீண்டும் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். வீ்ட்டின் அருகே வந்தபோது அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென ரூபசேனாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலி, கையில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து ரூபசேனா கொடுத்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் தீவிர விசாரணையில் ரூபசேனாவிடம் தங்கசங்கிலி மற்றும் பணம் பறித்ததாக சென்னை, பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் குமரேசன்(வயது 25), அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் விஷ்ணு(19) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 பவுன் சங்கிலி, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்