அக்னிபத் திட்டத்தில் சேர நாகர்கோவிலில் தீவிர பயிற்சியில் ஈடுபடும் இளைஞர்கள்

அக்னிபத் திட்டத்தில் சேர நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இளைஞர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Update: 2022-08-10 18:59 GMT

நாகர்கோவில்:

அக்னிபத் திட்டத்தில் சேர நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இளைஞர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அக்னிபத் திட்டம்

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் வருகிற 21-ந் தேதி முதல் செப்டம்பர் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர், கரூர், மயிலாடுதுறை, திண்டுக்கல் உள்பட 16 மாவட்டங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அவர்களுக்குக்கான அழைப்பு கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து திருச்சி ராணுவ முகாம் கர்னல் தீபக்குமார் தலைமையில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் சில தினங்களுக்கு முன்பு ஆய்வு நடந்தது. அப்போது முகாமுக்கு வருபவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அண்ணா விளையாட்டு அரங்கத்தில் போதிய மின் விளக்கு வசதிகள், குடிநீர், கழிவறைவசதிகள் அமைக்கும் பணிகள் மற்றும் பந்தல் போடும் பணியும் நடக்கிறது.

பயிற்சி

இந்த நிலையில் முகாம் நடைபெறும் விளையாட்டு அரங்கத்தை காண நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் வந்த வண்ணம் உள்ள னர். அவர்கள் அனைவரும் காலை மற்றும் மாலை நேரங்களில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பயிற்சியிலும் ஈடுபட்டு வருவதை காணமுடிந்தது. அதுபோக குமரி மாவட்ட இளைஞா்களும் விளையாட்டு மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் விளையாட்டு அரங்கத்தில் இளைஞர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதில் சில வெளி மாநில இளைஞர்கள் நாகர்கோவிலில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கி தினமும் மைதானத்துக்கு வந்து பயிற்சி செய்கின்றனர். நேற்றும் வெளி மாவட்டங்களை சோ்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் விளையாட்டு மைதானத்தில் குவிந்தனர். அவர்கள் தீவிர ஓட்டப்பயிற்சியை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்