கலெக்டர் அலுவலகத்தில் மனுவை தூக்கி வீசி இளம்பெண் போராட்டம்
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கோரிக்கை மனுவையும் தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கோரிக்கை மனுவையும் தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். இதில் திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ், முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். குறைதீர்வு நாள் கூட்டத்தையொட்டி தீக்குளிக்க முயற்சிப்பது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் நுழைவு வாயிலில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் கலெக்டர் அலுவலக வரவேற்பு வளாகம் முன்பு கோரிக்கை மனுக்களை தூக்கி வீசி இளம்பெண் ஒருவர் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் சமரசம்
அப்போது அவர் வந்தவாசி தாலுகா சாத்தம்பூண்டி மாதா கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீதேவி என்பது தெரியவந்தது. மேலும் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் பேசி ஏமாற்றிய நபர் மற்றும் அவரின் தாய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல முறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார். இதையடுத்து அவரை போலீசார் சமாதானம் செய்து குறைத்தீர்வு கூட்டத்திற்கு மனு அளிக்க அழைத்து சென்றனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.