காதல் என்ற போர்வையில்குமரியில் இளம் வயது திருமணம் அதிகரித்து வருகிறது; சமூக நலத்துறை அதிகாரி பேச்சு

காதல் என்ற போர்வையில் குமரியில் இளம் வயது திருமணம் அதிகரித்து வருகிறது என விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி சரோஜினி பேசினார்.

Update: 2023-09-08 18:56 GMT

நாகர்கோவில், 

காதல் என்ற போர்வையில் குமரியில் இளம் வயது திருமணம் அதிகரித்து வருகிறது என விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி சரோஜினி பேசினார்.

விழிப்புணர்வு கருத்தரங்கு

நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம், மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட குடும்ப நலத்துறை, சுகாதாரத்துறை ஆகியவை சார்பில் இளம்வயது திருமணம் மற்றும் இளம்வயது கர்ப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் நேற்று நடந்தது.

கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் உஷா தலைமை தாங்கினார். தமிழ்த்துறை பேராசிரியை ஷீஜா வரவேற்று பேசினார். குடும்பநலத்துறை உதவி இயக்குனர் கற்பகவல்லி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சொர்ணராணி ஆகியோர் இளம் வயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

இளம்வயது திருமணம் அதிகரிப்பு

குமரி மாவட்டத்தில் மிகவும் இளம் வயதில் திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக காதல் என்ற போர்வையில் இளம்பெண்கள் பெற்றோர்களை தங்கள் எதிரிகளாக கருதிக்கொண்டு, காதலர்களுடன் சேர்ந்து சுற்றுவதுடன், முறை தவறிய உறவால் கர்ப்பம் அடைவது சர்வ சாதாரணமாகி விட்டது. அல்லது உரிய வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனால் சட்ட விளைவுகளுக்கும் ஆளாக வேண்டியுள்ளது. அவர்களுடைய காதலர்களும் சிறை செல்லும் நிலை ஏற்படுகிறது. பல பெண்கள் தங்கள் காதலர்களை அழைத்துச் சென்று திருமணம் செய்ய வற்புறுத்தும் சம்பவங்களும் வருகின்றன.

இதுதவிர கல்லூரி மாணவிகள் போதை பழக்கத்துகும் அடிமையாகி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் கஞ்சா போதைக்கு அடிமையான ஒரு மாணவியை, ஆட்டோ டிரைவர் மீட்டு எங்களிடம் ஒப்படைத்தார். எனினும் அந்த பெண் கஞ்சா போதையில் இளைஞர்களிடம் சிக்கி சீரழிந்ததுடன் பெற்றோர் மற்றும் அதிகாரிகளான எங்களையும் மிரட்டிய சம்பவம் நடந்தது. எனவே போதை மற்றும் இளம் வயது திருமணத்தில் இருந்து பெண்கள் விலகி இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில் சுகாதாரத்துறை அதிகாரிகள், குழந்தைகள் பாதுகாப்புக்குழும அதிகாரிகள், கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்