கொடைரோடு அருகே பேனர் வைக்கும் தகராறில் வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை; தடுக்க வந்த உறவினருக்கு கத்திக்குத்து

கொடைரோடு அருகே பேனர் வைக்கும் தகராறில் வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். தடுக்க வந்த உறவினருக்கு கத்திக்குத்து விழுந்தது.

Update: 2022-06-20 16:33 GMT

கொடைரோடு அருகே பேனர் வைக்கும் தகராறில் வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். தடுக்க வந்த உறவினருக்கு கத்திக்குத்து விழுந்தது.

பேனர் வைப்பதில் தகராறு

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ராஜதானிகோட்டையை சேர்ந்த சந்திரன் மகன் ராஜ்குமார் (வயது 27). இவரது உறவினர் பெருமாள்ராஜா (27). இவர்கள் 2 பேரும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கும், அதே ஊரை சேர்ந்த அமிர்தகணேசன் மகன் மனோஜ்குமார் (27), கணேசன் மகன் அன்பழகன் (26) ஆகியோருக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவில் பேனர் வைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை விலக்கிவிட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

கழுத்தை அறுத்தனர்

இந்தநிலையில் இன்று ராஜதானிகோட்டையில் உள்ள காளி பகவதி அம்மன் கோவில் அருகில் ராஜ்குமார், பெருமாள்ராஜா ஆகியோர் பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மனோஜ்குமாரும், அன்பழகனும் அவர்களிடம் தகராறு செய்தனர். இதனால் இருதரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த மனோஜ்குமாரும், அன்பழகனும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜ்குமாரின் கழுத்தை அறுத்தனர். இதனை தடுக்க வந்த பெருமாள்ராஜாவையும் கத்தியால் குத்தினர். பின்னர் மனோஜ்குமார், அன்பழகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

போலீசார் விசாரணை

இதற்கிடையே படுகாயம் அடைந்த ராஜ்குமார் மற்றும் பெருமாள்ராஜாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜ்குமார் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பெருமாள்ராஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பயங்கர சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், நிலக்கோட்டை துணை சூப்பிரண்டு (பொறுப்பு) முருகன், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய மனோஜ்குமார், அன்பழகனை தேடினர். அப்போது அதே ஊரில் பதுங்கியிருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மோதலில் அவர்கள் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்விரோதத்தில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கொடைரோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்