காதலன் வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணா போராட்டம்
சாத்தான்குளத்தில் காதலன் வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணா போராட்டம் நடத்தினார்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே உள்ள கீழக்கருங்கடல் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகன் மகள் ரூபியா (வயது 20). இவர் செட்டிக்குளம் மேலத்தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் உதயநிதி (26) என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே இவர்களது காதல் விவரம் இருவரது பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து பிரச்சினை உருவாகியது. இதனால் இருதரப்பினரும் கடந்த ஆண்டு சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் பேச்சுவார்த்தையில் ரூபியாவை, உதயநிதி திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார். இதனையடுத்து இருவரும் கடலூரில் உதயநிதி உறவினர் வீட்டில் இருந்துள்ளனர். பின்னர் உதயநிதி கடலூரிலும், ரூபிகா சென்னையிலும் வேலை பார்த்து வந்துள்ளனர். ஆனால் உதயநிதி, ரூபிகாவை திருமணம் செய்ய காலதாமதம் செய்து வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து ரூபிகா செட்டிக்குளத்தில் உள்ள காதலன் வீட்டின் முன்பு அமர்ந்து காதலனுடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீசார் வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் ரூபிகா அவர் வீட்டுக்கு சென்றார்.