எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 90.57 சதவீதம் தேர்ச்சி

விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 90.57 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 1.42 சதவீத தேர்ச்சி குறைந்தது.

Update: 2023-05-19 18:45 GMT

விழுப்புரம்:

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 56 தேர்வு மையங்களிலும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 65 தேர்வு மையங்களிலும் என மொத்தம் 121 தேர்வு மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்தது.

இந்த தேர்வை விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 208 பள்ளிகளில் இருந்தும், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 153 பள்ளிகளில் இருந்தும் ஆக மொத்தம் 361 பள்ளிகளில் இருந்து 12,451 மாணவர்களும், 12,232 மாணவிகளும் என மொத்தம் 24,683 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.

90.57 சதவீதம் தேர்ச்சி

இதன் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 10,886 மாணவர்களும், 11,470 மாணவிகளும் என மொத்தம் 22,356 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 87.43, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 93.77. மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 90.57 ஆகும்.

கடந்த 2021-22-ம் கல்வியாண்டில் விழுப்புரம் மாவட்டம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 91.99 சதவீத தேர்ச்சி பெற்றது. இதனை காட்டிலும் தற்போது விழுப்புரம் மாவட்டம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 1.42 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

24-வது இடத்துக்கு தள்ளப்பட்டது

மேலும் இந்த தேர்ச்சியின் மூலம் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் 24-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 12-வது இடத்தில் இருந்த விழுப்புரம் இந்த ஆண்டு மேலும் 12 இடத்துக்கு பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் என்றாலே கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்ற பெயர் பெற்று வருகிற நிலையில் அதற்கேற்றாற்போல் இந்த ஆண்டு நடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்விலும் விழுப்புரம் மாவட்டம் 24-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்