திமுக ஆட்சியை பிடித்ததற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களுமே காரணம்- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஜாக்டோ-ஜியோ சங்கம் சார்பில் சென்னை தீவுத்திடலில் இன்று மாநாடு நடைபெற்றது .

Update: 2022-09-10 14:56 GMT

சென்னை,

ஜாக்டோ-ஜியோ சங்கம் சார்பில் சென்னை தீவுத்திடலில் இன்று வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நடைபெற்றது .இந்த மாநாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அவர் கூறியதாவது ;

 நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியர். அரசும் அரசியலும் இரண்டற கலந்தது, இதை யாராலும் பிரிக்க முடியாது. அந்த உணர்வோடு நான் இதில் கலந்து கொண்டிருக்கிறேன். அரசு ஊழியர்கள் மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது என்று நினைத்தாலும், அரசு ஊழியர்கள் மாநாட்டில் அரசியல் பேசாமல் வேறு எங்கே பேசுவது என்பது எனது எண்ணமாக அமைந்திருக்கிறது. திமுக ஆட்சியை பிடிப்பதற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களுமே காரணம் என்ற நன்றி உணர்ச்சியோடு உங்கள் முன்னாள் நான் நின்று கொண்டிருக்கிறேன்.

நமது ஆதரவு முதலமைச்சருக்கு எப்போது உண்டு என்பதை உறுதி செய்வோம் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்றும் கோப்புகளில் கையெழுத்திட்டு விட்டு மாநாட்டிற்கு வந்துள்ளேன். 10 வருடங்கள் நீங்கள் பட்ட கஷ்டத்தை படிப்படியாக சரி செய்வோம். அனைத்து வகையான தற்காலிக ஆசிரியர்களும், பிற தற்காலிக பணியாளர்களும் 60 வயது வரை பணி புரிய அனுமதிக்கப் படுவர். அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப பணியிட மாறுதல் கலந்தாய்வு, ஒளிவுமறைவு இன்றி அக்டோபர் 15 முதல் நடத்தப்படும். உங்கள் நம்பிக்கை நிச்சயம் போகாது. கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். உங்களுக்கு எப்போதும் பக்க பலமாக இருப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்