மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி

பொள்ளாச்சியில் மாணவ- மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-06-15 13:49 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் மாணவ- மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

யோகா பயிற்சி

உலக யோகா தினம் வருகிற 21-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பொள்ளாச்சி அருகே உள்ள ஆவல்சின்னாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் குங்குமலதா தலைமை தாங்கினார். பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி யோகா மற்றும் இயற்கை மருத்துவர் அர்ச்சனா கலந்துகொண்டு யோகா பயிற்சி அளித்தார்.

மேலும் அவர் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கி கூறினார். மேலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் குறித்த கையேடு வழங்கப்பட்டது. இதில் உதவியாளர் ஜான்சிராணி, நகராட்சி மருந்தாளுனர் காமராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியை அருட்செல்வி நன்றி கூறினார்.

நினைவாற்றல் தூண்டப்படும்

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:-

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதாலும், ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போனை அதிகமாக பயன்படுத்தியதாலும் மாணவ-மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்துவது குறைந்து உள்ளது. இதன் காரணமாக மாணவ- மாணவிகள் மன அழுத்தத்தை போக்குவதற்கு ஒரு வார காலம் புத்துணர்ச்சி பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. யோகா மூலம் குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் நினைவாற்றல் தூண்டப்படுகிறது. ஆரோக்கியமான உணவு சாப்பிடுவதாலும், மூச்சு பயிற்சி தொடர்ந்து மேற்கொள்வதாலும் உடல் நலத்தை பாதுகாக்க முடியும். யோகா மூலம் மன அழுத்தத்தை போக்கி குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்