அறுவடை நேரத்தில் மக்காச்சோளத்தில் பூச்சி தாக்குதலால் மகசூல் பாதிப்பு

சோழபுரம் பகுதியில் அறுவடை நேரத்தில் மக்காச்சோளத்தில் பூச்சி தாக்குதலால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2023-09-21 20:20 GMT

கும்பகோணம்:

சோழபுரம் பகுதியில் அறுவடை நேரத்தில் மக்காச்சோளத்தில் பூச்சி தாக்குதலால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மக்காச்சோளம் சாகுபடி

தஞ்சையில் முக்கிய சாகுபடி பயிர் என்றால் அது நெல் மட்டும்தான். இருப்பினும் மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்காச்சோளம், கம்பு போன்றவற்றையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். மாற்றுப்பயிராக இதை விவசாயிகள் பயிரிட்டு வருவதால் குறிப்பிட்ட லாபத்தை ஈட்டி வருகின்றனர்.

மக்காச்சோளம் மானாவாரியாக ஆடி (ஜூன்-ஜூலை) மற்றும் புரட்டாசி (செப்டம்பர்-அக்டோபர்) மாதத்திலும், இறவைப் பயிராக தை (ஜனவரி-பிப்ரவரி) மற்றும் சித்திரை (ஏப்ரல் -மே) மாதத்திலும் சாகுபடி செய்ய ஏற்றது.

கோழித்தீவனம்

கும்பகோணம் கோட்டத்தில் குருகூர், ஆனூர் மேலானமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. மக்காச்சோள சாகுபடிக்கு குறைந்த தண்ணீர், குறைவான பராமரிப்பு போதுமானதாக உள்ளது. கோழி தீவனத்துக்கு மக்காச்சோளம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன்காரணமாக மக்காச்சோளங்களை கோழிபண்ணை உரிமையாளர்கள், வியாபாரிகள் நேரடியாக வந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மக்காச்சோள விவசாயிகளுக்கு நல்ல லாபமும் கிடைக்கிறது.

பூச்சி தாக்குதல்

இந்த ஆண்டு தொடக்கத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்தபோது மழை பெய்து விதைகளின் முளைப்பு திறனை பாதித்தது. பின்னர் மீண்டும் விதை விதைத்து மக்காச்சோளம் நன்கு வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள மக்காச்சோளம் பயிரில் தற்போது பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. மக்காச்சோளத்தை வியாபாரிகள் போதிய விலை கொடுத்து வாங்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மகசூல் பாதிப்பு

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மக்காச்சோளத்தை பொருத்தவலையில் அதன் விளைச்சலை பொருத்தே விலை இருக்கும். ஆனால் நன்றாக விளைந்த மக்காச்சோளமாக இருந்தால் 1 கதிர் ரூ.5 வரை வியாபாரிகள் வாங்கி செல்வார்கள். ஆனால் பூச்சி தாக்குதல் பாதிக்கப்பட்டால் அதன் விலை குறைந்து விடும். தொடக்கத்தில் மழையால் மக்காச்சோளம் விளைச்சல் பாதித்தது. தற்போது பூச்சி தாக்குதலால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை வழங்க வேண்டும்

மேலும் பறவைகளும் மக்காச்சோளத்தை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயத்திற்கு செலவு செய்த பணத்தை கூட பெற முடியவில்லை. முதலில் விதைத்த விதை போது மழையால் பாதிக்கப்பட்டதால் ரூ.4 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டது. இதனால் குறைந்த நாட்களான 90 நாட்கள் பயிரை சாகுபடி செய்துள்ளோம். சிலர் மக்காச்சோளத்தை சாகுபடி செய்யாமல் உள்ளனர். மக்காச்சோளத்தை நம்பி ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்தும் பயனில்லை.

இந்த நிலை தொடர்ந்தால் மக்கா சோள சாகுபடியை கைவிட்டு வேறு பயிருக்கு செல்லும் நிலை ஏற்படலாம். எனவே வேளாண் அதிகாரிகள் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை உரிய ஆய்வு நடத்தி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்