உளுந்து செடிகளில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல்

சீர்காழி பகுதியில் உளுந்து செடிகளில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் பரவுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-04-02 18:45 GMT

திருவெண்காடு:

சீர்காழி பகுதியில் உளுந்து செடிகளில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் பரவுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

உளுந்து சாகுபடி

சீர்காழி பகுதிக்குட்பட்ட வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, கொள்ளிடம், பூம்புகார், புதுப்பட்டினம், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்களில், அறுவடைக்கு முன்னர் ஊடுபயிராக உளுந்து, பச்சைப்பயிறு ஆகிய தானியங்கள் விதைக்கப்பட்டது.

சம்பா அறுவடைக்கு பின்னர், சுமார் 70 நாட்களில் முளைத்து உளுந்து அறுவடைக்கு தயாராகும். இந்த உளுந்து மற்றும் பச்சைப்பயறு விவசாயிகளுக்கு நல்ல லாப தரக்கூடிய பயிர்கள் என்பதால் விவசாயிகள் அதிக அளவில் விதைத்துள்ளனர்.

மஞ்சள் நோய் தாக்குதல்

ஊடுபயிராக விதைக்கப்பட்டு ஒரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள இந்த உளுந்து மற்றும் பச்சைப்பயரில் தற்பொழுது மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் பரவி வருகிறது.

சீர்காழி தாலுகா முழுவதும் சுமார் 2000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து மற்றும் பச்சைப்பயரில் இந்த நோய் தாக்கி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மானிய விலையில் உளுந்து, பயறு விதைகள்

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலன் கருதி சம்பா சாகுபடிக்கு பின்னர் சிறுதானிய பயிர்களை பயிரிட உளுந்து மற்றும் பச்சைப்பயறு விதைகள் மானிய விலையில் வழங்கப்பட்டது.

அதனைப் பெற்ற விவசாயிகள் தங்களுடைய விலை நிலங்களில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு விதைகளை விதைத்தனர்.

வேளாண் துறையினர் அறிவுரை

தற்போது பூத்து காய்க்கும் பருவத்தில் உள்ள பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்த நோய் வேகமாக பரவுவதால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளோம். இந்த நோய் தாக்கிய வயல்களில் உள்ள உளுந்து மற்றும் பச்சைப்பயறு செடிகள் பழுப்பு நிறமாக மாறி அழுகி விடுகிறது. மேலும் செடிகளில் உள்ள காய்களில் சாறு உறிஞ்சப்பட்டு விடுகிறது.

இதனால் காய்கள் சோடையாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நோய் தாக்குதலால் மகசூல் பாதிப்பு ஏற்படுவது நிச்சயம். இதனால் மிகவும் கவலையடைந்து உள்ளோம். எனவே, இதனை கட்டுப்படுத்த வேளாண்மைத் துறையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு உரிய அறிவுரைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்