பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி லட்சார்ச்சனை யாகம்

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி லட்சார்ச்சனை யாகம் நடைபெற்றது.

Update: 2023-08-11 21:15 GMT

பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி லட்சார்ச்சனை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான விழா கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆடி வெள்ளிக்கிழமைகளில் முத்தங்கி, சந்தனகாப்பு, வெள்ளிக்கவச அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. இந்தநிலையில் ஆடி லட்சார்ச்சனை விழா நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இதையொட்டி நேற்று பெரியநாயகி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. முன்னதாக சன்னதி முன்பு வெள்ளிக்குடம் வைத்து, அதில் புனிதநீர் நிரப்பப்பட்டது. பின்னர் கோவில் யானை கஸ்தூரிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், 108 கலச பூஜை, விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், சிறப்பு யாகம் நடந்தது. பின்னர் நேர்த்திக்கடனாக பக்தர்கள் வழங்கிய பட்டுப்புடவைகள், தங்கம், வெள்ளி பொருட்கள் ஆகியவை யாககுண்டத்தில் போடப்பட்டு அர்ப்பணம் செய்யப்பட்டது.

அதன்பிறகு சுமங்கலி பூஜை, பிரம்மச்சாரிய பூஜை, பூர்ணாகுதி நடந்தது. மேலும் பிரதான கலசம், 108 கலசங்கள் கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பெரியநாயகி அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன. இதில், கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர் குழு உறுப்பினர் மணிமாறன் மற்றும் கோவில் அலுவலர்கள் கலந்துகொண்டனர். பூஜை நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் உள்ளிட்டோர் செய்தனர். ஆடி லட்சார்ச்சனை சிறப்பு யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்