ஷேர் மார்க்கெட்டில் அதிகம் சம்பாதிக்கலாம் எனக்கூறி ரூ.5¼ கோடி மோசடி செய்த ஜெராக்ஸ் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
ஷேர் மார்க்கெட்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவருடைய மகன் தேவராஜன். இவர் சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் ஒரு புகார் கொடுத்தார். அதில் சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகாவிற்குபட்ட உலிபுரம் பகுதியை சேர்ந்த சாந்தகுமார் (வயது 47). இவர் அந்த பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவர் என்னிடம் ஷேர் மார்க்கெட்டில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறினார்.
இதை நம்பி அவரிடம் பல தவணைகளில் ரூ.65 லட்சத்து 78 ஆயிரத்து 499 கொடுத்தேன். பின்னர் அவரிடம் பணம் கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்கவில்லை. எனவே கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில்கூறியுள்ளார்.
சிறையில் அடைத்தனர்
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அந்த பகுதியை சேர்ந்த 15 பேரிடம் ஷேர் மார்க்கெட் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறி ரூ.5¼ கோடி மோசடி செய்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சாந்தகுமாரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.