போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு :5 மையங்களில் நடந்தது

விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு 5 மையங்களில் நடந்தது.

Update: 2023-08-26 18:45 GMT


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் 749 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (621 ஆண்கள், 128 பெண்கள்) காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரி ஆகிய 5 தேர்வு மையங்களில் நடந்தது.

ஆர்வமுடன் எழுதினர்

நேற்று காலை பொது அறிவுத்தேர்வு நடைபெற்றது. இதற்காக தேர்வு எழுத வருபவர்கள் அனைவரும் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்தவர்கள் மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். காலை 8.30 மணிக்கு பிறகு வந்தவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. அதுபோல் தேர்வர்களின் தேர்வுக்கூட சீட்டை சரிபார்த்து தேர்வு மையத்திற்குள் உள்ளே அனுப்பி வைத்தனர். செல்போன், ப்ளூடூத் போன்ற எந்தவொரு எலக்ட்ரானிக் சாதனங்களையும் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இத்தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. இத்தேர்வை எழுதுவதற்காக 4,834 ஆண்களும், 1,368 பெண்களும் என மொத்தம் 6,202 பேர் விண்ணப்பித்தனர். இதில் 4,501 ஆண்களும், 805 பெண்களும் ஆக மொத்தம் 5,306 பேர் ஆர்வமுடன் வந்திருந்து தேர்வை எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 681 ஆண்களும், 215 பெண்களும் என 896 பேர் தேர்வு எழுத வரவில்லை.

மாலையில்...

இத்தேர்வு முடிந்ததும் மாலை 3.30 மணிக்கு தமிழ் தேர்வு நடந்தது. இத்தேர்வை எழுத 5,323 ஆண்களும், 1,467 பெண்களும் என மொத்தம் 6,790 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 4,510 ஆண்களும், 1,234 பெண்களும் ஆக மொத்தம் 5,744 பேர் ஆர்வமுடன் வந்திருந்து தேர்வை எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 813 ஆண்களும், 233 பெண்களும் என 1,046 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இத்தேர்வானது மாலை 5.10 மணிக்கு முடிவடைந்தது. தேர்வு பாதுகாப்பு பணி மற்றும் தேர்வு மைய கண்காணிப்பு பணிகளில் 1,031 போலீசார் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பார்வையிட்டனர்

இதனிடையே விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி மையத்தில் நடந்த தேர்வை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காவல்துறையில் 5 ஆண்டுகள் பணி முடித்த 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி தேர்வு மையத்தில் நடக்கிறது. இத்தேர்வை 756 ஆண்களும், 158 பெண்களும் என மொத்தம் 914 போலீசார் எழுத உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்