குடிமங்கலம்
குடிமங்கலம் நால்ரோடு அருகே பல்லடம் செல்லும் சாலையில் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிமங்கலம் நால்ரோடு
உடுமலை திருப்பூர் மாநில நெடுஞ்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. உடுமலையிலிருந்து குடிமங்கலம் பல்லடம் வழியாக திருப்பூருக்கு அதிக அளவில் பஸ் வசதி உள்ளது. இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கனரக வாகனங்களும் அதிக அளவில் சென்று வருகின்றன. குடிமங்கலத்தை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. கிராம மக்கள் தங்களது தேவைகளுக்காக குடிமங்கலம் வந்து செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளுக்காக குடிமங்கலம் வந்து செல்கின்றனர். குடிமங்கலத்தில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், ஊராட்சி அலுவலகம், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளன. குடிமங்கலம் நால்ரோடு அருகே பல்லடம் செல்லும் சாலையில் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
நிழற்குடை
குடிமங்கலம் நால்ரோடு பகுதியில் பல்லடம் செல்லும் சாலையில் நிழற்குடை இல்லாததால் மழை மற்றும் வெயில் காலங்களில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பஸ்சுக்காக வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. உடுமலையிலிருந்து பல்லடம் திருப்பூருக்கு செல்லும் பஸ்கள் நால்ரோடு அருகே பல்லடம் சாலையில் நின்று செல்லும் நிலையில் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே குடிமங்கலம் நால்ரோடு அருகே பல்லடம் செல்லும் சாலையில் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.