குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோவிலில் ஏராளமான பெண்கள் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு
கார்த்திகை தீப திருநாளையொட்டி குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோவிலில் ஏராளமான பெண்கள் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
காரைக்குடி,
கார்த்திகை தீப திருநாளையொட்டி குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோவிலில் ஏராளமான பெண்கள் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
கார்த்திகை தீப விழா
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத தீப திருநாளையொட்டி முருகன் மற்றும் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு நேற்று கார்த்திகை தீப திருநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முருகன் மற்றும் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு, கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை முதலே காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக குன்றக்குடி வந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
காலை 11.30 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் உற்சவர் சண்முகநாதபெருமானுக்கு பால், பன்னீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. முன்னதாக ஏராளமான கிராமத்தில் இருந்து சாமி தரிசனம் செய்ய வந்த விவசாயிகள் தங்களது வயலில் விளைந்த புது நெல் மற்றும் அரிசியை கொண்டு வந்து இடும்பன் சன்னதி முன்பு காணிக்கையாக செலுத்தினர்.
பரணி தீபம்
மேலும் ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் ஏராளமான பெண்கள் நெல் மற்றும் அகல் விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்தனர். பின்னர் மாலையில் மலையில் இருந்து உற்சவர் சண்முகநாதபெருமான், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கீழே உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினார். கோவில் மடத்தில் உள்ள ஆலயத்தில் பரணி தீபத்தை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஏற்றி வைத்து மடத்தின் முன்பு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.
தொடர்ந்து கோவில் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளிய சண்முகநாதபெருமானுக்கு சிறப்பு தீபாராதனை காட்ட பின்னர் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் அரோகரா, அரோகரா என்ற கரகோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். கார்த்திகை தீப திருநாளையொட்டி காரைக்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து குன்றக்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
சொக்கப்பனை
ெசட்டிகுறிச்சி செல்வ விநாயகர் கோவிலில் கார்த்திகை தீப திருநாளையொட்டி செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், கோவில் முன்பாக அமைக்கப்பட்ட சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. கரிசல்பட்டி கைலாசநாதர் கோவில், புழுதிபட்டி பாலதண்டாயுதபாணி கோவில், வில்லி விநாயகர் கோவில், தர்மபட்டி பிள்ளையார் கோவில் மற்றும் பல்வேறு கோவில்களில் சொக்கப்பனை ஏற்றப்பட்டன. இந்த சொக்கப்பனை கொழுந்து விட்டு எரியும் அந்த ஜோதியை சிவமாகவே எண்ணி பக்தர்கள் வழிபடுவர். மேலும் அது எரிந்த பிறகு, சாம்பலை எடுத்து விவசாய நிலங்களில் தூவினால் விவசாயம் பல மடங்கு பெருகும் என்று பக்தர்களின் நம்பிக்கை.