தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா:1,500 இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு

Update: 2023-09-17 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 1,500 இடங்களில் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தி விழா

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களிலும் இன்று அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற உள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1,500 இடங்களில் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

இதற்காக தர்மபுரி உள்ளிட்ட அனைத்து நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் விநாயகர் சிலைகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். 1 அடி முதல் 10 அடி உயரம் கொண்ட சிலைகள் விற்பனை செய்யப்பட்டது.

பூஜை பொருட்கள்

இதேபோன்று வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு படைக்கப்படும் பழங்கள், சிலைகளை அலங்கரிக்கும் குடைகள், பூக்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் காரணமாக தர்மபுரி நகரில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்கள் மற்றும் சிலைகள் வைத்து வழிபடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்