தங்கக்கோவில் வளாகத்தில் உலகிலேயே உயரமான நடராஜர் சிலை
தங்கக்கோவில் வளாகத்தில் உலகிலேயே உயரமான நடராஜர் சிலை திறக்கப்பட்டுள்ளது.
வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான ஐம்பொன் நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 23 அடி உயரம், 18 அடி அகலத்தில் 15 டன் எடை கொண்டது. இந்த சிலை தற்போது ஸ்ரீபுரம் தங்கக்கோவில் அருகே உள்ள திருமண மண்டப வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை சக்தி அம்மா திறந்து வைத்தார்.
இதுகுறித்து சக்திஅம்மா நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய கலாசாரம் பழமையும், தொன்மையும், அழகும் வாய்ந்தது. சமூகத்தில் கோவில் என்பது மிகவும் முக்கியமானது. கோவிலுக்கு செல்லும்போது மனிதனுக்கு பூரண மன அமைதி கிடைக்கும். கோவிலில் தான் தெய்வீகத்தன்மையை உணர முடியும்.
வேலூர் நாராயணி பீடம் கடந்த 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 30 ஆண்டுகளாக பல தரும காரியங்கள் நடந்து வருகிறது. 2007-ம் ஆண்டு ஸ்ரீபுரம் உருவாக்கப்பட்டு தங்கக் கோவில் அமைக்கப்பட்டது. அந்த வளாகத்தில் 70 கிலோ தங்கத்தில் சொர்ண மகாலட்சுமி சிலை அமைக்கப்பட்டு பக்தர்கள் கையால் தற்போது அபிஷேகம் நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து 9 அடி உயரத்தில் சீனிவாச பெருமாளுக்கு சன்னதி அமைக்கப்பட்டது. தொடர்ந்து வெள்ளியால் ஆன சக்தி கணபதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
தற்போது உலகில் மிகப்பெரிய 23 அடி உயர நடராஜர் சிலை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இது ஆனந்த தாண்டவ ரூபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நடராஜருக்கு தனியாக கோவில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீபுரத்தில் சுப்பிரமணியர் வழிபாடு மட்டும் இன்னும் இல்லை. விரைவில் முருகருக்கும் கோவில் அமையும்.
இவ்வாறு அவர் கூறினர்.
பேட்டியின்போது, தங்கக்கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி பீட மேலாளர் சம்பத் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.