காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி பட்டறை

கடலூர் மாவட்ட காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி பட்டறையை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.;

Update:2023-10-23 00:15 IST

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் சார்பில் காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து பேசியதாவது:-

காலநிலை மாற்ற இயக்கம் அமைந்துள்ள ஒரே மாநிலம் நமது தமிழ்நாடு மட்டும் தான் என்பதில் பெருமிதம் அடைகிறேன். இந்த காலநிலை மாற்றம் என்பது நாம் சந்தித்து கொண்டிருக்கின்ற ஒரு சவாலான இடர்பாடு என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, எந்தெந்த மாவட்டங்களில் எந்த வகையான இடர்பாடுகள் உள்ளது. எந்த வகையான சவால்கள் உள்ளது. அதற்கான தீர்வுகள் என்ன? என்பதை கண்டறிவதற்காகவும். மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த தகவல்களை தெரிவித்து பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட அளவிலான பயிலரங்கம் நடைபெறுகிறது.

சுற்றுச்சூழல் மேம்பாடு

காலநிலை மாற்றதால் நமது மாவட்டத்திற்கும் எந்த விதமான இடர்பாடுகள் வரலாம். அதை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதற்கு இந்த பயிலரங்கத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை, இந்தியா 2070-ல் அடையும் என்று தெரிவித்துள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2070-ம் ஆண்டுக்கு முன்னதாகவே இந்த இலக்கை தமிழ்நாடு அடைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கிணங்க அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை பசுமை மயமாக்க 23 சதவீதத்தில் இருந்து 33 சதவீதத்திற்கு மாற்றுவதற்கு வனத்துறை மற்றும் பல்வேறு துறைகள் சார்பாகவும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான செயல்திட்டங்களை வகுக்க இந்த பயிலரங்கம் துணையாக இருக்கும். காலநிலை மாற்றத்தின் விளைவுகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, காலநிலை மாற்றத்திற்கு எதிரான தணிக்கைகளில் ஈடுபடவேண்டியது நம் கடமை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வன அலுவலர் குருசாமி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துணை இயக்குனர் சவுமியா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்